வாணிதாசன் கவிதைத் திரட்டு

வாணிதாசன் கவிதைத் திரட்டு, மகரந்தன், சாகித்ய அகாடமி, பக். 304, விலை 185ரூ.

தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? பாரதிக்கு ஒரு பாரதிதாசன். பாரதிதாசனுக்கோ பல தாசர்கள். அவர்களில் சூரியனாய் சுடர் விட்டுப் பிரகாசிப்பவர்  சுரதா. பவுர்ணமி நிலவாய் பவனி வருபவர் வாணிதாசன். விண் மீனை, வாணிதாசன் வர்ணிப்பதைப் பாருங்கள் தைத் திங்கள் குளம் பூத்த பூவோ? தமிழ் வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? மைத்தடங்கண் மடமாதர் உதிர்த்துப் பின்னர் மாலைக்குத் தேர்ந்தெடுக்கும் முல்லைப் பூவோ? நாளைய தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று, அவர் கனவு காண்கிறார் தமிழ் முரசம் கேட்குதடி அதோ கேள் பெண்ணே! ஜாதி, மதம், கட்சி எல்லாம் ஒன்றாம் அங்கே! தமிழ் நாட்டைத் தமிழ்த் தலைவர் ஆளக்கண்டு தோளெல்லாம் பூரிக்கும் தமிழ்க்கூட்டம் பார்! உழவர்களின் நிலை உயர வேண்டும் என்று பாடுகிறார் காட்டைத் திருத்திக் கழனி வளைத்துக் கடுமழை குளிரால் மேனி இளைத்து வாட்டும் பசிநோய் மாள நெல் விளைத்து வழங்கி நலிந்து பின் புழுங்கும் உழவனிங்கு விழித்தெழ ஊதாயோ சங்கே! தமிழச்சி என்ற காவியத்தில் சொல்லுவார் படித்திட வேண்டும் நீங்கள் பல தொழில் உணர வேண்டும் படித்திடில் உணவுப் பஞ்சம் படிப்படியாக நீங்கும் படித்திடில் சாதிப் பேச்சப் பறந்திடும் அறிவும் உண்டாம் படித்திடில் அடிமை ஆண்டான் எனும் பேச்சும் பறக்கும் அன்றோ? பொதுவுடைமை, பகுத்தறிவு, பெண்ணியம் முதலான கொள்கைகளைப் போற்றியவர் வாணிதாசன். மொழி, இன, நாட்டுணர்வுக்கும் குரல் கொடுத்தவர். தமிழ் மரபுக் கவிதை வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். இயற்கைக் கவிஞர், புதுமைக் கவிஞர், கவிஞரேறு, தமிழ்நாட்டுத் தாகூர் என்றெல்லாம் போற்றப்படும் இவருக்கு தமிழக அரசு பாவேந்தர் விருதும், பிரெஞ்சுக் குடியரசு செவாலியே விருதும் வழங்கிச் சிறப்பித்து உள்ளன. பகுத்தறிவுப் பயிர் செழிக்கவும், தன்மானத்தணல் பெருகவும், தனது இறுதி மூச்சுவரை பாடுபட்ட இந்தத் தனித்தமிழ்ப் பாவலரின் அருமையான பல கவிதைகள், இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுத்தளித்த மகரந்தன் பாராட்டுக்கு உரியவர். -எஸ். குரு. நன்றி: தினமலர், 17/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *