வாழ்விக்க வந்த காந்தி
வாழ்விக்க வந்த காந்தி, ரொமெய்ன் ரோலந்து, தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 150ரூ.
ரொமெய்ன் ரோலந்து என்ற, பிரெஞ்சு பேரறிஞர் எழுதிய மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நூலினை, புகழ்மிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழில் தந்திருக்கிறார். மொழிபெயர்க்கும் பணியில் தமது துணைவி திருமதி ஜெயஜனனி, பெரிதும் உதவியது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். மகாத்மாவின் அருங்குணங்கள், சுதந்திரப் போராட்டம் தொடர்பான அவருடை பல்வேறு செயற்பாடுகள், சத்யாக்கிரக நிகழ்வுகளில் அவர் பின்பற்றிய விதிமுறைகள், பிறர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காந்தி அளித்த பதில்கள், அகிம்சா தத்துவம் என, ஒட்டுமொத்தமாக மகாத்மா பற்றிய ஓர் உயரிய மதிப்பீடாக அமைந்துள்ள, ஒப்பற்ற இந்த நூலினை, மிக சிறப்பாக தமிழாக்கம் செய்து அளித்துள்ளார் ஜெயகாந்தன். மூன்று பாகங்களாக விரியும் இந்த நூலில், ஒவ்வொர் அத்தியாய ஆரம்பத்திலும், ஓவியர் ஆதிமூலம் வரைந்த மகாத்மாவின் கோட்டோவியங்கள் இடம் பெற்றுள்ளன. -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 20/7/2014.
—-
மெனி ஷேட்ஸ் மேக் ஏ ரெயின்போ, விஸ்வம், விஜயா பப்ளிகேஷன்ஸ், பக். 168, விலை 150ரூ.
நாகிரெட்டி, ஆந்திராவும் சென்னையும் ஒன்றாக இருந்த சென்னை ராஜதானியில், கடப்பா ஜில்லாவில், பொட்டிப்பாடு என்ற கிராமத்தில் பறிந்து வளர்ந்து, பின் சென்னை வந்தவர். பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். பதினான்கு மொழிகளில், வெளிவரும், அம்புலிமாமா என்ற சிறுவர் பத்திரிகையை தோற்றுவித்தவர். தனது விஜயா வாகினி கம்பைன்ஸ் மூலம் பல அருமையான திரைப்படங்களை வழங்கியவர். புகழ்பெற்ற இரு மருத்துவமனைகளை நிறுவியவர். இந்திய திரைப்பட உலகிற்கு அவர் ஆற்றிய பணிக்காக, தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். திருப்பதி தேவஸ்தான வாரியத்தின், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பக்தர்களின் வசதிக்காக முன்யோசைனையுடன், பல வசதிகளை செய்து தந்தவர். எல்லாம் என் நண்பர்கள், பணியாளர்கள் இவர்களுடைய ஒத்துழைப்பாலும், ஆண்டவனின் அருளாலும் நிகழ்ந்தவை என்று கூறி மிக அடக்கமாக வாழ்ந்தவர். அவர் வாழ்வில் நிகழ்ந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்த நூல் நினைவு கூர்கிறது. கட்டுரைகள், 1980களில், பொம்மை திரைப்பட இதழில் வெளிவந்தவை. இப்போது மிக எளிய ஆங்கிலத்தில் வெளிவந்ததிருக்கிறது. -மயிலை சிவா. நன்றி: தினமலர், 20/7/2014.