வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்
வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன. புதிய புதிய பொருட்கள் பயன்பாட்டுக்கு வரும்போது பழைய பொருட்களில் பல காணாமற் போய்விடுகின்றன. எவ்வளவுதான் வாழ்க்கை மாறி வந்தாலும் சில பண்பாட்டு வழிமுறைகள் தொடர்ந்து வருகின்றன. சிறு தெய்வ வழிபாடு, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு, கண்ணேறு கழித்தல் போன்ற பல நிகழ்வுகள் இன்றைய வாழவிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தமிழர்களின் அன்றாட வாழ்வில் புழங்கிய பொருட்கள், அணிந்த ஆடைகள், வழிபாட்டு முறைகள் எல்லாவற்றையும் மிக அருமையாக இந்நூல் நமக்கு நினைவுபடுத்துகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு நாம் புழங்கிய பொருட்கள் இன்றில்லை. நகரங்களில் வாழ்பவர்களுக்கு கிராமங்களில் பயன்படுத்தப்படும் சால், ஏற்றம், துறட்டுக்கோல், தார்க்குச்சி தெரிய வாய்ப்பில்லை. எத்தனை ‘மா’ நிலம் 1 ஏக்கர் என்று நிறையப் பேருக்குத் தெரியாது. இவ்வாறு நமது பண்பாட்டுக்கு அடித்தளமாக உள்ளவற்றை – பலருக்குத் தெரியாதனவற்றை மிக எளிமையாக, சுவையாக இந்நூல் சொல்கிறது. கிராமத்தில் வளர்ந்து நகரில் பிழைப்புக்காக நிலை கொண்டிருக்கும் ஐம்பதைக் கடந்தவர்கள், இந்த நூலைப் படித்தால் மலரும் நினைவுகளின் பிடியில் சிக்கி தம்மை மறப்பார்கள் என்பது உறுதி. நன்றி: தினமணி, 07/3/2016.