விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள்
விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள், சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் பல்வேறு போராட்ட வடிவங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டது. அரசியல் ரீதியான போராட்டங்களுக்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட இசைப்பாடல்களும் பாடப்பட்டன. ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு எதிரான – தேசிய இயக்கத்துக்கு ஆதரவான பாடல்களைப் பாடிய போராட்ட வீரர்களின் வரலாற்றைச் சொல்வதே இந்நூல். குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ, ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ என்று வள்ளலார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாடியது, 1922ஆம் ஆண்டு கே. எஸ். பாரதிதாசன் என்ற பெயரில் பாரதிதாசன் தேச சேவகன் இதழில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாடல்கள் எழுதியது, கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தின்போது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை பாடியது, கிருஷ்ண விலாஸ் என்ற நாடக சங்கத்தை ஆரம்பித்து, தேசவிடுதலைப் போராட்டத்தை ஆதரித்து சொரிமுத்து (பின்னாளில் ஜீவானந்தம்) பாடிய பாடல், வர்த்தகம் செய்ய வந்த கொக்க, வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு, அக்கரைச் சீமைவிட்டு வந்து… கொள்ளை அடித்துக் கொழுக்குதடி பாப்பா என்று வள்ளி திருமணம் நாடகத்தில் விசுவநாததாஸ் பாடியது என பல அரிய செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். பாரதியார், கே.பி. சுந்தராம்பாள், இன்னும் பெயர் அறியப்படாத பல பெருங்கவிகளின் பாடல்கள் என சுதந்திரப் போராட்ட காலச்சூழலுக்கே நம்மை இழுத்துச் செல்கிறது நூல். நன்றி: தினமணி, 20/7/2015.