விழித்திரு விடியல் விருது கொடுக்கும்
விழித்திரு விடியல் விருது கொடுக்கும், மணிமகலைப் பிரசுரம், சென்னை, விலை 60ரூ.
இந்த கவிதை நூலின் ஆசிரியரான இளம் பெண் கவிஞர் மதுரா, வறுமையுடன் போராடி, எதிர் நீச்சல் போட்டு, வேலை பார்த்துக் கொண்டே எம்.ஏ படித்துத் தேறியவர். அனுபவம் காரணமாகவும், நிறைய படித்ததன் காரணமாகவும் கருத்தாழம் மிக்கக் கவிதைகளை எல்லோருடைய நெஞ்சிலும் கொஞ்சி விளையாடும் வண்ணம் படைத்துள்ளார். சிறகு விரித்து விட்டேன், சிகரம் தொடுவதற்கு என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார் கவிஞர். நிச்சயம் சிகரத்தைத் தொடுவார் என்ற நம்பிக்கையை, அதில் உள்ள கவிதைகள் உண்டாக்குகின்றன. காமப் புலம்பலையும், காதல் தவிப்பையும், கழிவிரக்க அவலங்களையும் குப்பையாய்க் குவித்துக் கொண்டிருக்கும் படைப்புலகில் அவற்றை முற்றாகத் தவிர்த்து, மேன்மையான நோக்கங்களுடன் ஒரு நல்ல கவிதைப் படைப்பை வழங்கி இருப்பதற்காக மதுராவைமனமுவந்து பாராட்டலாம் என்ற அணிந்துரையில் தமிழருவி மணியன் குறிப்பிட்டிருப்பது, சரியான மதிப்பீடு. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.
—-
வாழ்வின் சிறப்பு, கவிச்சோலை பதிப்பகம், புதுக்கோட்டை, விலை 60ரூ.
கவிஞர் புதுக்கோட்டை பொன்னுசாமி எழுதிய கவிதைகள் தொகுப்பில் ஆன்மிகம், காதல், தாய்மை, இல்லறம், நேர்மை, நட்பு போன்ற தலைப்புகளிலான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. சிறந்த குழந்தைப் பாடல்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.