வீரக் கண்ணகி
வீரக் கண்ணகி- ம.பொ.சிவஞானம்; பக்.160; ரூ.100; ம.பொ.சி.பதிப்பகம், சென்னை-41
சிலம்புச் செல்வர் எனப் புகழ்பெற்ற ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதியுள்ள நூல். சிலப்பதிகாரத்தின் தனிச் சிறப்புகளை விளக்கும்விதமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலை, இராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்குகிறார். இளங்கோவடிகள் எந்தச் சமயத்தையும் சாராதவர்; கண்ணால் காணக் கூடிய திங்கள், ஞாயிறு, மழை போன்ற இயற்கை சக்திகளை வணங்கியிருக்கிறார் என்றும் அதே சமயம் நாட்டின் நடைமுறையைப் புலப்படுத்த ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகியவற்றை இயற்றினார் என்றும் கூறுகிறார். கண்ணகி வழிபாடு சிலப்பதிகார காலத்திலிருந்தே தமிழகத்தில் உள்ளது; சிலப்பதிகார காலத்திலிருந்தே சில பழக்க வழக்கங்களை நாம் பின்பற்றி வருகிறோம் என்றும் நூல் விளக்குகிறது. கோவலனைக் கொலை செய்த குற்றத்துக்காக மதுரையையே கண்ணகி எரித்ததும், பின்பு கோவலனுடன் விண்ணுலகம் சென்றதும் ஒருவேளை கற்பனையாக இருந்தாலும் கூட, அது சிலப்பதிகாரத்தை அழகு செய்கிறது என்கிறார் நூலாசிரியர். சிலப்பதிகாரத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்ட சிறந்த நூல். நன்றி: தினமணி, 20-8-2012