வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்)
மலைப்பாதையில் நடந்த வெளிச்சம், பத்மஜா நாராயணன், டிஸ்கவரி புக் பேலஸ் (பி)லிட், விலை 70 ரூ
கவிஞர் பத்மஜா நாராயணனின் கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது, ஒவ்வொரு கவிதையும் அவரவர் தம் சுய அனுபவங்களோடு ஒத்துப் போகிற பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘உனக்கும் எனக்கும் நடுவே அலைகின்றன, நமக்கான வார்த்தைகள்’ என்கிற வரிகள், வாழ்வின் ஏதாவது ஓர் இடத்தில் தவிர்க்க முடியாததுதானே… ‘எல்லாப் பொறிகளிலும் இலகுவாய் போய் சிக்கிக் கொள்கிற சுயம். எந்தப் பொறிக்கும் வேண்டப்படாத வஸ்துவாய் பொறியிலிருந்து இடதுகையால் தூக்கி எறியப்படும் நானானது மற்றொரு பொறியில்தான் தவறாது விழுகிறது.’ இந்தக் கவிதையில் உள்ள உள்ளார்ந்த விஷயங்கள் உற்றுநோக்க வைக்கின்றன. காதல், பாசம், பரிவு, தவிப்பு, ஏக்கம்… எல்லாமுமாய் இவரது கவிதைகள் பிரசவித்துள்ளன. கவிதைப் பிரியர்களின் கைகளுக்கு இத்தொகுப்பு ஓர் இனிய பரிசு.
—
வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), தமிழ்த்தேனீ, தென்றல் நிலையம், 12 பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608001, விலை 75 ரூ.
தமிழ்த்தேனீயின் ‘வெற்றிச் சக்கரம்’ சிறுகதைத் தொகுப்பு, ஐம்பத்திரண்டு சிறுகதைகளைக் கொண்டது. அழகான நடையில் ஆழமான கருத்துகளை நூலாசிரியர் ஆக்கியுள்ளார். ‘ஆன்றோர் செரித்த அறுசுவையின் வெளிப்பாடே இங்கே நமக்கு அகப்பாடு. எங்கே அறிவு வெளிப்படினும் அதுவே நமக்கு முதல் ஈடு’ என்று சொல்லும் இந்நூலாசிரியர் தம் எழுத்திலும் அதனைப் பிரதிபலிக்கிறார். அவரவர் தம் கடமைகளை ஒழுங்காகச் செய்ய, தம் படைப்பாற்றலைப் பயன்படுத்த விரும்பும் இந்நூலாசிரியரின் படைப்பு – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற மூன்று வாசகத்தைத் தன்னகத்தே கொண்டு படைக்கப்பட்டிருக்கிறது. முரண்பாடுகளையும், உடன்பாடுகளையும் வெளிப்படுத்தும் பாத்திரங்களைக் கொண்டு இந்தச் சிறுகதைகள் நகர்கின்றன. ‘வல்லமை’ என்னும் இவரது இணையத்தில் வெளியான கதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்நூலை வாசிப்பதிலிருந்து இவரின் கதைகளை மதிப்பிடலாம். – மகேஷ் நன்றி: கல்கி 12-08-12