வெள்ளித்திரையில் அள்ளிய புதையல்
வெள்ளித்திரையில் அள்ளிய புதையல், பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், பக். 544, விலை 500ரூ.
இந்த நூல், தமிழ்த் திரைப்படப் பாடல்களை சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இனம் பிரித்து தொகுத்தளித்திருக்கிறது. நூலாசிரியரின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது. ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூலின், பொருளடக்கத்தில் உள்ள தலைப்புகளைப் படிப்பதுவே ஒரு சுவையான அனுபவமாகத்தான் இருக்கிறது. பல தலைப்புகளை உட்பிரிவாகவும் பிரித்து, அதில் அடங்கக்கூடிய பாடல்களையும் பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். உதாரணமாக இசைக்கருவிகள் என்ற தலைப்பில் தோல் இசைக்கருவிகள், துளை இசைக்கருவிகள், நரம்பு இசைக்கருவிகள், உலோக இசைக்கருவிகள் என்று இனம் பிரித்து, இந்த நான்கு வகை இசைக் கருவிகளிலும் உள்ள பல இசைக்கருவிகள் கொண்ட பாடல்கள் அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்திப்பூ என்ற பகுதியில் பல அரிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. பாடல்களைப் பற்றிய செய்திகளுடன் பல பாடகர்கள் குறித்தும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் குறித்தும் பல சுவையான செய்திகள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. எம்.ஜி.ஆருக்கான ஒரு முழுப்பாடலை எல்.ஆர். ஈஸ்வரி பாடியிருப்பது, டி.எம்.சௌந்தர்ராஜன் இசையமைத்த ஒரே படம் காந்திமதி கதாநாயகியாக நடித்த ஒரே படம் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. திரையிசைப் பாடல்களில் இலக்கணம் என்ற தலைப்பில் திரைப்படப்பாடல்களின் மூலம் தமிழ் இலக்கணத்தின் இரட்டைக் கிளவியும், அடுக்குத் தொடரும், வழுவமைதியும் விளக்கப்பட்டு இருப்பது சுவையாக இருக்கிறது. திரையிசையில் ஆர்வமுள்ளவர்களுக்கு படிப்பதற்கு மிகுந்த சுவையான அனுபவத்தை தரும் இந்த நூல் திரைப்படப்பாடல்களை ஆய்வு செய்பவர்களுக்கு வழிகாட்டியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 28/12/2015.