வெள்ளை நிழல் படியாத வீடு
வெள்ளை நிழல் படியாத வீடு, லாங்ஸ்ன் ஹியூஸ், மாயா ஏஞ்சலு, எதேல்பர்ட் மில்லர், தமிழில் ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு, பக். 64, விலை 40ரூ.
தமிழ்ச் சூழலில் கருப்பு கவிதைகள் அமெரிக்காவில், கருப்பின மக்கள் எதிர்கொண்ட நிற, இனவெறி ஒடுக்குதல் குறித்த, ஆப்ரோ அமெரிக்க இலக்கியங்கள், கருப்பு இலக்கியம் என குறிப்பிடப்பட்டன. அவற்றுக்கும், இந்தியாவில் தலித்துகள் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குதலுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக, தமிழில் வெளிவந்த, நிறப்பிரிகை, கவிதாசரண் போன்ற இதழ்கள் கருதின. அதனால், கருப்பு இலக்கியங்களை அவை தமிழில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்தன. தலித் இலக்கியத்தின் தன்மையை பெருமளவு மாற்ற, உலகளவில் நடந்த விளிம்புநிலை குறித்த அந்த இலக்கிய விவாதங்கள், 1990களில் தமிழில் அறிமுகமாகின. ஆனால் தற்போது அவை குறித்த உரையாடல்களே அற்றுப்போய்விட்டன. இந்த நிலையில், வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்த, மூன்று கவிஞர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளை, ரவிக்குமார் மொழிபெயர்த்து தந்துள்ளார். இலக்கிய விமர்சகர்களிடையே கருப்பு இலக்கியத்தை புரிந்துகொள்ள, தனித்துவமான கோட்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற கருத்து எழுந்த, 1960களின் பிற்பகுதியில், கருப்பு அழகியலை கட்டமைக்கும், கவிதைகளை எழுதியவரும் ஹார்லெம் மறுமலர்ச்சி என்ற கருப்பின எழுச்சி போராட்டத்தை நடத்தியவருமான, லாங்ஸ்டன் ஹியூசின் கவிதைகள் இந்த நூலில் முதலில் தரப்பட்டுள்ளன. மாயா ஏஞ்சலுவின் கவிதைகள், இரண்டாவதாக உள்ளன. கடைசியாகவுள்ள எதேல்பர்ட் மில்லரின் கவிதைகள், உலகமயமாக்கலால் மொழி, பண்பாடு, இன அடையாளங்களை இழந்துவரும் நம்முன், நம்மில் பலர் அந்நிய மொழியில் நேசிக்கிறோம்/அதனால்தான் நம் இதயங்கள் நம் உணர்வை மொழிபெயர்க்க/யாராவது கிடைப்பார்களா என தேடிக்கொண்டு இருக்கின்றன என, உலகமயமாக்கலின் எதிர்கதையாடலை முன்வைக்கின்றன. இந்த முறையில் இந்த நூலிலுள்ள கவிதைகளை புரிந்துகொள்ள, அவை எழுதப்பட்ட காலம், அதன் ஆசிரியர்கள் முன்வைத்த கருப்பின கவிதைகளுக்கான கோட்பாடுகள் ஆகியவற்றை, நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையென்றால், இந்த கவிதைகள், விளிம்புநிலை மக்களின் தனித்த உணர்வுநிலைதான் என, தவறாகப் புரிந்து கொள்ள இடமளித்துவிட வாய்ப்புகள் உள்ளன. இதை தவிர்க்க, அந்த கவிதைகளை அணுகுவதற்கான பிம்புலத்தை தர வேண்டியது மொழிபெயர்ப்பாளரின் கடமையாகும். ஆனால் வாசகர்கள் மீது மொழிபெயர்ப்பாளர் வைத்துள்ள நம்பிக்கையால், அவற்றின் பின்புலத்தை அவர் தரவில்லைபோலும். அதேநேரம் மொழிபெயர்ப்பு மூலத்தை படிக்கும் உணர்வை அளிக்கிறது. -ச.பிரபாகரன். நன்றி: தினமலர், 15/11/2015.