வேலி மேல் வாச மலர்
வேலி மேல் வாச மலர் (பிறமொழிக் கதைகள்), வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, பக். 160, விலை 120ரூ.
கணையாழி, படித்துறை, தளம் இதழ்களில் வெளிவந்த மொழியாக்க சிறுகதைகளில், இந்தியில் இருந்து 6, ஆங்கிலம், வங்கம், மைதிலி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி மொழிகளில் இருந்து தலா ஒன்று வீதம் மொத்தம், 12 சிறுகதைகள் ஆகியவை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில், 100 ஆண்டுகளுக்கு முன், பிரேம்சந்த், இந்தியில் எழுதிய, பண்ணையாரின் கிணறு, மருமகளால் அடிபட்டு இறந்து போன பூனைக்கு பிராயச்சித்தம் செய்ய முற்படும் மாமியார் – பண்டிட்ஜியின் யதார்த்தத்தை நகைச்சுவையுடன் தந்துள்ள பிராயச்சித்தம், சமூக உணர்வுடன் தலித் விதவையின் ஆறாத் துயரங்களை, ஆணித்தரமான முடிவை, வெளிப்படுத்தும் மராத்தி சிறுகதை, சத்யகாம ஜாபாலி ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு, மூலத்தை படிக்கும் உணர்வை தருகின்றன. படைப்புக்கு கூடி வரவேண்டிய மனநிலையை மொழிபெயர்ப்பிலும் ஈடுபட செய்துள்ளதன் மூலம், மொழிபெயர்ப்பாசிரியரின், மொழி பெயர்ப்பு, இயல்பாகவே, சுவைபட அமைந்துள்ளது. -பின்னலூரான். நன்றி: தினமலர், 6/7/2014.
—–
நூலின்றி அமையாது உலகு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 244, விலை 150ரூ.
To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-233-3.html புத்தகங்களின் சிறப்பை, வாசிப்பதன் அவசியத்தை பற்றி முழுக்க முழுக்க சொல்வதற்காகவே ஒரு புத்தகம். புத்தகங்கள் பற்றி, பல்வேறு அறிஞர்கள், பல்வேறு புத்தகங்களில் எழுதியுள்ளவற்றை தேர்வு செய்து, தொகுத்து ஒரு புத்தகமாக்கி இருக்கிறார், 144 புத்தகங்கள் எழுதிய தமிழ்த்தேனீ மோகன். என்னை கவர்ந்த புத்தகங்கள் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கட்டுரை துவங்கி ஜெயகாந்தன், தமிழருவி மணியன் என 26 அறிஞர்களின் கட்டுரைகள், கட்டுரை மலர்கள் என்ற அத்தியாயத்தில் தொகுப்பட்டுள்ளன. பாரதிதாசன், வைரமுத்து உட்பட, ஆறுகவிஞர்களின் கவிதைகள் கவிதை மாலை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் பற்றி, மார்டின் லூதர் கிங் முதல் ஷேக்ஸ்பியர் வரை சொன்ன முத்தான 100 மொழிகளை தேர்வு செய்து, புத்தக மொழிகள் 100 என்ற தலைப்பில் தந்திருக்கின்றன அத்தனையும் அமுதம். இளையதலை முறை வாசிப்பு பழக்கத்தை வசதியாய் மறந்து விடக்கூடாது. இரா.மோகனின் முயற்சி, புத்தகங்களின் அருமையை இவர்களுக்கு உணர்த்தும். புத்தக காதலர்களுக்கு இதுவும் ஒரு பொக்கிஷம். -ஜி.வி.ஆர். நன்றி: தினமலர், 6/7/2014.