வைரமுத்து சிறுகதைகள்
வைரமுத்து சிறுகதைகள், கவிஞர் வைரமுத்து, சூர்யா வெளியீடு, விலை 300ரூ.
உலக சிறுகதைகளோடு ஒப்பிடத் தக்கவை! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025177.html கவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்த தொகுப்பிலுள்ள 40 கதைகளுக்குமான களங்கள் வேறுவேறு.காலங்களும் வேறுவேறு. ஆனால் இவற்றுக்கிடையேயான பொதுப்பண்பு, இவை மானுடத்தைப் பேசுகின்றன என்பதே. இந்தக் கதைகளில் வரும் நடேச அய்யரும்(வேதங்கள் சொல்லாதது), கவி அப்துல்லாவும்(மார்க்கம்), வாத்துராமனும்(கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்), சின்னமணியும்(அப்பா), நடிகர் பரமேஷூம்(சிரித்தாலும் கண்ணீர் வரும்), டைகர் ராமானுஜமும்(மாறும் யுகங்கள் மாறுகின்றன), ஈஸ்வரியும்(அர்த்த நாரீஸ்வரி), நாம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள்தாம். ஆனால் அவர்களின் அக உலகம்? அது நாம் அறியாதது. அந்த அக உலகின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கின்றன இந்த தொகுப்பில் உள்ள கதைகள். குறிப்பாக யாருக்கும் வாழ்க்கை பக்கமில்லை, இறந்த காலங்கள் இறந்தே போகட்டும், அப்பா போன்ற கதைகளின் முடிவுகள் ஒரு செகாவியன் டச்சோடு அமைந்துள்ளது. வறுமையில் செம்மையை வலியுறுத்தும் மார்க்கம், மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பதைச் சொல்லும் ராஜராஜன். ஏற்பது இகழ்ச்சி என்பதை நினைவூட்டும் காந்தியின் கடைசி வம்சம் போன்ற கதைகள், இன்றைய இளம் தலைமுறையினர் பாடமாகப் பயில வேண்டியவை. நீரில் எழுதிய காதல், ஊழல் வர்மனும் மூன்று மந்திரிகளும், கணவன் – மனைவி – மகள் போன்ற கதைகள் வழக்கமான சிறுகதைப் பாணியிலிருந்து மாறுபட்டு, புதிய உத்தியில் எழுதப்பட்டுள்ளன. இலங்கைப் பிரச்னை, கவுரவக் கொலைகள், தீண்டாமை, மதுவின் கொடுமை போன்ற இன்றைய சமூகப் பிரச்னைகள் பலவும் இந்த கதைகளில் பேசப்பட்டாலும், எதுவுமே பிரசார தொனியில் இல்லாமல், எல்லாக் கதைகளிலுமே கலைத்தன்மை ஊடும் பாவுமாக இழையோடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பிலுள்ள, இறந்த காலங்கள் இறந்தே போகட்டும். இப்படியும் ஒருவன் இறந்தான், 7.4 ரிக்டர் போன்ற கதைக்களங்கள் தமிழுக்குப் புதியன. பல இடங்களில் வார்த்தைகள் சுரீர் என்று தைக்கின்றன. குறிப்பாக ‘பொய்தானடி கொல்லும். மெய் கொல்லாது, கன்னிமை என்பது புனிதமல்ல. நேர்மை, பிச்சைங்கறது இழிவு. திருட்டுங்கறது பகிர்வு, கம்யூனிஸ்ட்ங்க சில பேரு குடிப்பாங்க, தண்ணீக்குள்ள இருக்கிற மீனு தண்ணி குடிக்கிற மாதிரி, தீப்பிடிக்கும் மரத்தில் பட்சிகள் தங்க முடியுமா, இனிமே சாராயக்கடையை சுடுகாட்டுப் பக்கத்துலயே வச்சுடுங்க’ இப்படி. புத்தர், ஷாஜகான், ராஜராஜன் போன்ற மாமனிதர்களில் துவங்கி, வாழ்வின் பல அடுக்குகளில் வாழ்பவர்கள், பல மதங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு குணங்கள் உடையவர்கள் என, விதவிதமான மனிதர்கள் இந்த கதைகளில் இடம்பெற்றாலும், எல்லாருமே நம்முன் ரத்தமும் சதையுமான உலவும் மனிதர்களாகத்தான் இருக்கிறார்களே தவிர, தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் நடக்கும் பொய்யான பாத்திரம் என்று ஒன்றுகூட இல்லை. முதன்முதலாக சிறுகதை எழுதத் துவங்கிய ஒருவர், தொடர்ந்து எழுதிய 40 சிறுகதைகள் இவை என்பது வியப்பளிக்கும் உண்மை. இதற்கு முன்னர் தமிழில் எந்த எழுத்தாளரும் செய்யாதது. உருவம் – உள்ளடக்கம் – உத்தி ஆகிய மூவகையிலும் காத்திரமாக அமைந்த இந்த தொகுப்பின் 40 சிறுகதைகளும் தமிழ் வாழ்வின் நாற்பது முகங்கள். இந்த தொகுப்பிலுள்ள முன்னுரை, சிறுகதை இலக்கியம் குறித்து ஆய்வு மேற்கொள்வோருக்கு, இன்றியமையாத தரவுகளைக் கொண்ட கருத்துக் கருவூலம். உலகச் சிறுகதைகளோடு ஒப்பிடத்தக்க 40 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுப்பின் இறுதியில் இடம்பெற்றுள்ள பொருளடக்கம், துவக்கத்தில் இடம் பெற்றிருக்கலாம் என்ற ஒரு சிறு குறையைத் தவிர வேறு குறையொன்றுமில்லை. எழுதப் படிக்கத் தெரிந்த எல்லோரிடமும், அவசியம் இருக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு இந்த வைரமுத்து சிறுகதைகள். -ராஜகண்ணன். நன்றி: தினமலர், 1/11/2015.