ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம்

ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், எண் 107/8, கௌடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 396, விலை 175ரூ.

33 தலைப்புகளில் மகாவிஷ்ணு குறித்த கதைகளின் தொகுப்பு. மகாவிஷ்ணு, லட்சுமி, பூ தேவி, நீளா தேவி கதைகளுடன் துவங்குகிறது. மகாவிஷ்ணுவிடம் இருந்து பிரம்ம தேவர் தோன்றியது. கலைமகள் கதை என விரிந்து அனந்த பத்மநாப சுவாமி, திருப்பதி மலையப்ப சுவாமி, உப்பிலியப்பன், அரங்கநாதர், சுந்தராஜப் பெருமாள் என பெருமாள்களின் கதைகளுடன் செல்கிறது. ஆதிசேஷன், கருடாழ்வான், அனுமன் ஆகியோரின் கதைகளுடன் மகாவிஷ்ணுவின் தசாவதாரக் கதைகள், 108 திவ்யதேசம், ஆழ்வார் ஆசாரியர்களின் கதைகளுடன், பகவத்கீதை, சாளக்கிராமம், துளசி, சங்க, சக்கரம் என மகாவிஷ்ணு தொடர்புடைய அனைத்தையும் சிறப்பாகத் தொகுத்துள்ளார். விஷ்ணு புராணத்தின்படி மகாவிஷ்ணுவிடம் இருந்து உலகமும் படைப்பும் இயக்கமும் தோன்றிய கதைகள் எளிய நடையில் தரப்பட்டுள்ளது சிறப்பு. 108 திவ்யத் தலங்களின் வழிகாட்டிக் குறிப்புகளும் தலத்தின் சிறப்பும் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. படிப்போரை நிச்சயம் கவர்ந்திழுக்கும். நன்றி: தினமணி, 27/5/13.  

—-

 

தென்னாட்டுச் செல்வங்கள் (இரண்டு பாகங்கள்), ஓவியர் சில்பி, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 896இ விலை 650ரூ.

சில படைப்புகளை வார்த்தைகளால் விளக்கவோ விவரிக்கவோ முடியாது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் அமரர் சில்பியின் அமரத்துவம் பெற்ற ஓவியங்கள். ஓவியம் வரையும் திறனை இறைவன் பலருக்கு அளித்துள்ளான் எனினும் தன்னையே (இறைவன்) வரையும் திறனை மிகச் சிலருக்கு மட்டுமே அவன் அருளியுள்ளான். அதில் முதன்மையானவர் ஓவியர் சில்பி என்றால் அது மிகையாகாது. 64ஆவது நாயன்மார் என்று ஓவியர் சில்பியை இப்புத்தகத்தின் முன்னுரையில் ஓவிய மேதை கோபுலு வருணித்துள்ளது மிகப் பொருத்தம். மதுரை தொடங்கி ஹளேபீடு வரை 39 ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை ஓவியங்களாக வடித்திருக்கிறார் ஓவியர் சில்பி. இத்தொகுப்புகளை வாங்கி பக்கம் பக்கமாக சில்பி வடித்துள்ள சிற்பங்களை (ஓவியங்கள்) அதன் பின்னணியில் உள்ள விளக்கங்களோடு படித்துப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கும் வண்ணம் நம்முள் பக்தியும் கலை ஆர்வமும் ஊடுருவுகிறது. இத்தகைய புத்தகத்தை வாங்குவதற்கு சிபாரிசு வேண்டுமா என்ன? இதைவிட நல்ல தாளை புத்தகத்திற்குப் பயன்படுத்திருக்கலாம் என்பது மட்டுமே ஒரே ஒரு திருஷ்டி பரிகாரம். நன்றி: தினமணி, 27/5/13.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *