ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா
ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா, வேணுசீனிவாசன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 360, விலை 200ரூ.
ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தைப் பற்றிய பலவிதமான புரிதல்களையும் புகட்டும் நல்ல தொகுப்பு. நான்கு பகுதிகளில் அனைத்தையும் விளக்க முற்பட்டுள்ளார் நூலாசிரியர். வைஷ்ணவம் என்பதன் விளக்கம், வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கான தத்துவங்கள், இவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அவதரித்த ஆழ்வார்கள், அவர்களின் கருத்துக்களுக்கு விளக்கங்களைச் சொல்லி மக்களிடையே பரப்பிய ஆச்சார்யர்கள் எனக் கச்சிதமாக நான்கே பகுதிகளில் மொத்தமும் அடக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயத்தின்பால் பற்று கொண்டு கடைப்பிடிக்கும் சாதாரண பக்தன் ஒருவன், அதைப் பற்றிய புரிதல்களும் ஞானமும் கொண்டிருக்க வேண்டும். அதை இந்த நூல் நிச்சயம் கொடுக்கிறது எனலாம். வேதங்களில் வைணவம், தமிழ்நாட்டின் சங்க இலக்கியம், தொல்காப்பியம் இவற்றில் வைணவமும் திருமால் வழிபாடும், வைணவமும் வாழ்க்கையும், விசிஷ்டாத்வைத தத்துவமும், அவற்றில் பொதிந்துள்ள ரஹஸ்யத்ரயம் எனப்படும் முப்பொருள் உண்மை, மூன்று மந்திரங்கள், அர்த்தபஞ்சகமாகிற ஐம்பொருள் தத்துவம், குறிப்பாக வைணவத்துக்கு ஆதாரத் தத்துவமாகிற சரணாகதித் தத்துவம் இவை அனைத்தும் இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஆழ்வார்கள், ஆசார்யர்களின் வாழ்வில் செய்திகள், வைணவ தத்துவ ஞானத்தை எளிமையாக விளக்குகின்றன. உண்மையில் இது ஓர் என்சைக்ளோபீடியா என்று சொல்வதற்குத் தகுதியான நூலாகவே திகழ்கிறது. நன்றி: தினமணி, 22/10/2012.
—-
ஹலோ டாக்டர், தொகுப்பு-கீதா, புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை, விலை 100ரூ.
புதிய தலைமுறை வார இதழில் வெளியான உடல் நலம் தொடர்பான கேள்விபதில்களின் தொகுப்பு இது. எல்லா வயதினரும் இதில் தங்கள் உடல்நலம் குறித்த ஐயங்களை எழுப்பியிருக்கிறார்கள். அவற்றுக்கு உரிய மருத்துவ வல்லுநர்கள் (அலோபதி, சித்தா, ஹோமியோபதி முதலான) விரிவான விடை அளித்திருக்கிறார்கள். தியானம், உடற்பயிற்சி முதலியவை தொடர்பான கேள்வி பதில்களும் இடம் பெற்றிருக்கின்றன. நன்றி: இந்தியாடுடே, 17/10/2012.