ஹாரிபாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

ஹாரிபாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், ஜே.கே.ரோலிங், பி.எஸ்.வி. குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷங் ஹவுஸ், 42, மாளவியா நகர், போபால் 462 003, பக். 370, விலை 350ரூ.

ஹாரிபாட்டர் புத்தக வரிசையில் இது இரண்டாவது. ஹாக்வாட்ஸ் மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளியில், முதல் ஆண்டு படிப்பை முடித்த ஹாரி உள்ளிட்ட மாணவர்கள், விடுமுறைக்காக தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். ஹாரி, தனது பெரியம்மா, பெட்டூனியாவின் வீட்டிற்கு செல்கிறான். விடுமுறை முடிந்து பள்ளிக்கு புறப்பட ஓரிரு நாட்கள் இருக்கும் நேரத்தில் டாபி என்ற வினோத பிராணி ஹாரியை பள்ளிக்கு செல்ல வேண்டாம். விபரீதங்கள் காத்திருககின்றன என எச்சிரிக்கிறது. எனினும் அதையும் மீறி, ஹாரி ஹாக்வார்ட்ஸுக்கு பள்ளிக்கு செல்கிறான். அங்கு வாரிசுதாரர்களின் எதிரிகள் ஜாக்கிரதை என்ற வார்த்தைகள் பள்ளியின் பிரதான சுவரில் தோன்றுகின்றன. அதையடுத்து ஓரிரு மாணவர்கள், திடீரென கல்லாக்கப்படுகின்றனர். ஹாரியின் உற்ற தோழியான ஹெர்மயனியும், ஒருநாள் திடீரென கல்லாக்கப்படுகிறாள். அதையடுத்து நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமான மொழிநடையில் தந்திருக்கிறார் குமாரசாமி. குறிப்பாக, பலகூட்டுச்சாறு மாயத்திரவம் தயாரிப்பது, அதை அருந்தி விட்டு, மால்பாய் என்ற மாணவனின் நண்பர்களாக ஹாரியும் அவனது நண்பனும் மாறி, ரகசியங்களை சேகரிக்க முயல்வது, இறுதியில் பாதாள அறையில் தனது எதிரியை ஹாரி எதிர்கொள்வது ஆகிய சம்பவங்கள் மிக விறுவிறுப்பாக செல்கின்றன. ஹாரி நம்முடைய திறமைகளை விட நாம் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள்தான் நாம் உண்மையிலேயே யார் என்பதைப் படம் போட்டுக் காட்டுகின்றன என்பது போன்ற சுவையான உரையாடல்கள் புத்தகம் முழுவதும் உள்ளன. இந்த புத்தகத்தை வாசிப்பதற்கு வயது தடையில்லை. மொழிபெயர்ப்பு, மூலத்தை படித்த திருப்தியை அளிக்கிறது. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும். -சொக்கர். நன்றி: தினமலர், 16/2/2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *