சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுதி 1, 2)
சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுதி 1, 2), வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்.112, விலை 85ரூ.
கதை சொல்லிகள் காலந்தோறும் இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளை நல்வழிப்படுத்தி, அவர்களை அறநெறியில் செல்ல வழி ஏற்படுத்தித்தரும் கதைகளைச் சொல்லத்தான் பாட்டிமார்கள் இல்லை. அந்தக் குறையை நீக்கியிருக்கிறார் என்.சி. ஞானப்பிரகாசம். நம்காலத்தில் வாழ்ந்து மறைந்த அறிவாளர்கள், அன்பாளர்கள், அருளாளர்கள், ஞானிகள், தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை கதைகளாக்கி, சிறுவர்களின் மனதில் பதியவைக்கும் உத்தி சிறப்பு. குழந்தைகளும் குழந்தைகளுக்குக் கதை சொல்பவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
—-
நிஜகோவிந்தம், வாலி, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தர்ராஜன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 96, விலை 60ரூ.
நிஜகோவிந்தம் இந்த பூமியில் உயிர்களின் ஜனனத்தையும் மரணத்தையும் சொல்லும் முதல் கவிதையிலேயே கவிஞர் வாலியின் பட்டறிவு அடடா போட வைக்கிறது. இலக்கணத்தை மீறியே தீருவது என்று வன்மம் வைத்து வரைவது அல்ல புதுக்கவிதை என்ற அவரது விளக்கத்திற்கு அவரது சொந்தமண் தரும் சொப்பனமே சாட்சி. இன்னும் சமூகம், அரசியல், தனி மனித இன்ப, துன்பம், சமூக ஏற்ற இறக்கம் என்று எட்டிப்பார்க்கும் அவரது கவி உள்ளம் மரபை உள்வாங்கி, புதுமையைப் பிரசவிக்கும் கவி உத்தியாகவே உள்ளன. பூமாதேவி அசைவம் என்பதை பூகம்பம்தான் புரிய வைத்தது. ஒரு பூகம்பத்தின் கோரப் பசியை இவ்வளவு சுருக்கமாகக் கூற வாலியை விட்டால் யார் உண்டு? வாலி கவிதைப் பிரசவம்தான் நிஜகோவிந்தம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 19/2/2014.