ஹோமியோபதி தத்துவம்
ஹோமியோபதி தத்துவம் (ஆர்கனான் வழியில் விளக்கம்), பழ. வெள்ளைச்சாமி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 435, விலை 300ரூ.
‘முள்ளை முள்ளால் எடு’ என்பது நம்மூர் பழமொழி. அதுபோல ‘ஒத்ததை ஒத்ததால் குணப்படுத்து’ என்பது டாக்டர் ஹானிமன் கண்டுபிடித்த ‘ஹோமியோபதி’ மருத்துவத்தின் தத்துவமாகும். ஹோமியோபதி முறையில் பல புத்தாணடுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நூலாசிரியர், தனது சிகிச்சை அனுபவங்களை இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறார். ஒரு ஹோமியோபதி மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை’ ஆர்கனான்’ என்ற தத்துவ நூலில் டாக்டர் ஹானிமன் விரிவாக எழுதியுள்ளார். ஜெர்மனி மொழியில் எழுதப்பட்டு, பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஆர்கனானை’ ஆழமாகப் படித்தவர்கள் தமிழகத்தில் வெகு சிலரே. அந்த நூலை ஆழமாகப் படித்ததுடன், அதை அனைவருக்கும் புரியும்விதத்தில் கட்டுரைகளாக அளித்திருக்கிறார் நூலாசிரியர். ஜெர்மனியில் பிறந்த, அலோபதியில் எம்.டி.பட்டம் பெற்ற மருத்துவரான ஹானிமன், அலோபதி மருத்துவத்தைக் கைவிட்டு ஹோமியோபதியைக் கண்டுபிடித்தது ஏன்? ஹோமியோபதி மருந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்த ஹோமியோபதி மருந்துகளை அதிக அளவில் சாப்பிடலாமா? இந்த மருத்துவ முறையில் எப்படி நோயாளிக்கு நலம் கிடைக்கிறது? உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்தும் இந்த மருத்துவ முறை 200 ஆண்டுகளாகியும் வளர்ச்சி அடையாதது ஏன்? அதன் பின்னணியில் உள்ள வர்த்தக, அரசியல் சூழ்ச்சிகள் எவை? ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் விரிவாக எழுதியுள்ளார். நன்றி: தினமணி, 4/1/2016.