1001 இரவுகள்
1001 இரவுகள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
அரபு மன்னர் ஷாரியாருக்கு பெண்கள் மீது அடங்காத மோகம். தினம் ஒரு பெண்ணை மணப்பது, மறுநாள் காலை அவளைக் கொன்று விடுவது என்று பெண்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அவரைத் திருத்த எண்ணிய அமைச்சரின் மகள் ஷாரஜாத், மன்னரை மணந்து கொள்கிறாள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதை சொல்கிறாள். கதை கேட்கும் ஆவலில் அவளை கொல்லாமல் விடுகிறார். மொத்தம் 1001 நாட்கள் கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளை கேட்டதும் மன்னன் மனம் மாறுகிறார். பெண்கள் மீதான வெறுப்பை கைவிடுகிறார். அழகி ஷாரஜாத்தை தன்னுடைய ராணியாக்கிக்கொள்கிறார். மன்னருக்கு ஷாரஜாத் சொன்ன கதைகள், 1001 இரவு கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. உலகின் பெரும்பாலான மொழிகளில் இக்கதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ப்ரியா பாலு தமிழாக்கம் செய்துள்ள 1001 இரவுகள் கதைகள், விறுவிறுப்பாக உள்ளன. தமிழில் ஏற்கனவே 1001 இரவு கதைகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. எனினும் இப்போது வெளிவந்துள்ள இந்த நூல் பாராட்டத்தக்க விதத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 25/6/2014.
—-
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், புலவர் ம.அய்யாசாமி, அருள் பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 170ரூ.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முப்பெரும் வீரர்கள் காந்திஜி, நேருஜி மற்றும் நேதாஜி. நேதாஜியின் வரலாற்றை உணர்த்தும் காவியமாக இந்தப் புத்தகம் விளக்குகிறது. வங்காளத்தில் 1897இல் பிறந்த நேதாஜி, லண்டனுக்கு சென்று ஐ.சி.எஸ். படிப்பு பயின்று முதல் வகுப்பில் தேறியது. காங்கிரஸில் சேர்ந்தது, காந்தியுடன் மோதல் ஏற்பட்டு காங்கிரஸை விட்டு வெளியேறி பார்வர்டு பிளாக் அமைப்பைத் துவக்கியது ஐஎன்ஏ வை தோற்றுவித்துப் போராடியது தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றைத் தவிர ஐஎன்ஏவில் பணியாற்றிய கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த தியாகி எம்.ஜே. கலீலூர் ரஹ்மான், ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்க மங்கலம் தும்படக்கோட்டையைச் சேர்ந்த ராமுத்தேவர் ஆகியோர் நேதாஜியுடன் இணைந்து பணியாற்றியது தொடர்பான கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சி பெற்றதால், பல்வேறு சிறைகளில் தூக்கிலிடப்பட்ட இந்திய வீரர்களின் பட்டியல், சுபாஷ் சந்திர போஸ் பற்றிய அபூர்வ படங்கள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன. இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி பற்றிய முழுமையான தகவல்களின் தொகுப்பாக இந்தப் புத்தகம் விளங்குகிறது. நன்றி: தினமணி, 30/6/2014.