112 ரகசியங்கள்
112 ரகசியங்கள், ஓஷோ, ஓஷோ இன்டர்நேஷனல் நியூயார்க் பதிப்பகம்.
சோர்வை நீக்கி உற்சாகம் தரும் 112 ரகசியங்கள் ஓஷோவின் 112 ரகசியங்கள் என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். ஓஷோ இன்டர்நேஷனல் நியூயார்க் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. தியான வழிமுறைகளை, இந்த நூல் சொல்கிறது. சாதாரண மனிதனுக்கு, அவன் மொழியில் புரியும் வகையில், மிகுந்த ஆளுமையுடன் ஓஷோ எழுதியுள்ளார். அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மன உளைச்சல், உடல் வலி, சோர்வு ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், எவ்வித வழிகாட்டுதலும் இல்லாமல், ஓஷோ இந்த நூலில் கற்றுக் கொடுக்கிறார். நீண்ட நேரம் வேலை செய்யும்போது, உடலின் அனைத்து பாகங்களும் சோர்வு அடையும். அப்போது மருந்து உட்கொள்வதை விட, தியானம் செய்வதால் எதிர் விளைவுகள் ஏற்படாமல் சோர்விலிருந்து மீள்வதோடு, மனமும் உற்சாகம் அடையும் என ஓஷோ கூறுகிறார். மிக எளிய முறையில் அன்றாட பணிகளின் போதே செய்யும் தியானங்களாக, இவை இருப்பதுதான், சிறப்பு அம்சம். கண் விழிகளை உருட்டி செய்யும் தியானத்தின் பலனை, எளிதாக உணர முடியும். தியானத்தோடு, ஆன்மிகத்தையும் ஓஷோ போதிக்கிறார். ஆன்மா ஒன்றுதான், அது தங்கி இருக்கும் உடல்கள் தான் வேறானவை. ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், இறப்பும் தனியாக நடப்பவை. இதற்கு உட்பட்ட காலத்தில் சமூகம் என்ற கட்டமைப்பை மனிதன் ஏற்படுத்திக் கொள்கிறான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தனியாகவே இயங்க வேண்டும். அவனுக்காக, சமூகம் இயங்காது என்பன போன்ற, ஓஷோவின் தத்துவங்களும், தியானத்தோடு இணைந்தவையே. இறைவனை தேடுவதையும், அடைவதையும் பலர் பல வகையில் சொல்கின்றனர். இதில் ஓஷோ சொல்லும் வழிமுறைகள் யதார்த்தமாக, அன்றாட நடைமுறைகளோடு ஒன்றி, நவீனத் தன்மையோடு அமைந்திருப்பது, பெரும் ஈர்ப்பை அளிக்கின்றன. -வீணை காயத்ரி, துணைவேந்தர், இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம். நன்றி: தினமலர், 8/3/2015.