63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள், ஆலயப் பிரியர் சிவ. சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக். 496, விலை 300ரூ.

சிவநெறி பரப்பிய, 63 நாயன்மார்களின் பணி மிகப் பெரிய சாதனை. சுந்தரமூர்த்தி நாயனார் சுருக்கமாக கூறியதை, சேக்கிழார் சுவாமிகள் ‘திருத்தொண்டர் புராணம்’ என்று விரிவாகச் சொன்னார்.

அக்காவியம் பின்னர் பெரியபுராணம் என வழங்குகிறது. அப்புராணச் செய்யுள்களுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க., கோவை சி.கே.சி., போன்றோர் விரிவுரை எழுதினர். அவற்றை எல்லாம் இக்கணினியுலகில் படிக்க வாய்ப்பில்லாதோர், மிக எளிய தமிழில் படிக்கத் தக்க முறையில் இந்நூல் வெளிவந்துள்ளது.

சிவனடியார்களுக்குத் திருவோடு வழங்கிய திருநீலகண்டரும், வந்த அடியவர்களுக்குத் தவறாது சோறு போட்ட இளையான்குடி நாயனாரும், இறைவனுக்கே கண் தானம் செய்த கண்ணப்ப நாயனாரும், மற்ற பல நாயன்மார்களும் உபதேசம் செய்யாமல் வாழ்ந்து காட்டியுள்ளனர்.

இப்பெரியோர்களின் வாழ்க்கை முறையை ஊன்றிக் கவனித்தால், அவர்களின் பக்தி மூடத்தனமானது என்று நினையாமல், மனித நேயமும், இறைவன் மீது கொண்ட அளவற்ற பக்தியின் வெளிப்பாடும், நாம் இன்று தொலைத்துவிட்ட பல நல்ல பண்புகளையும், ஒழுக்கமுறைகளையும் அறிய வழிகாட்ட உதவும்.

ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாறு கூறி முடித்ததும், இந்நூலாசிரியர், அவர்களின் கோவில் இருக்குமிடமும், செல்லும் வழிமுறையும், கோவில்களோடு தொடர்புடைய சில பாடல்களும், அருகில் சில கோவில்களையும், கூறி, நம்மை வியக்க வைக்கிறார். ஆத்திக மக்கள் அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நல்ல நூல்.

– பேரா., டாக்டர் கலியன்சம்பத்து,

நன்றி: தினமலர், 30/7/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *