அவன் தாள் வணங்கி… (அறுபத்து மூவர் வரலாறு)

அவன் தாள் வணங்கி… (அறுபத்து மூவர் வரலாறு), செ. சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக். 206, விலை 150ரூ.

பழைமை இலக்கியம் (புராணம்) புதுமைப் பொலிவு பெற்றுள்ளது. பெரிய புராணம் எனப் போற்றப்படும் திருத்தொண்டர் புராணத்தை, பலர், அறுபத்து மூவர் கதைகளாக உரைநடையில் எழுதியுள்ளனர்.

ஆனால், இந்நூலில், ஒவ்வொரு நாயன்மார் பற்றியும் சுருக்கமாக, உரைநடையில், 10 வரியளவில் ஒரு குறிப்பை முதலில் வைத்து, அவ்வடியார் வரலாற்றை விரிவாக உரைப்பா (புதுக்கவிதை) பாங்கில், சிறிய சொற்களால் சீரிய கருத்துகளைச் செதுக்கியுள்ளார்.

இவர் தொழில் முறைக் கவிஞர் அல்லர். ஒரு நிறுவனத்தின் மனிதவள மேலாளராகப் பணியாற்றும் பயில்முறைக் கவிஞர். அறுபத்து மூவரொடு, தெய்வச்சீர் சேக்கிழார், மாணிக்கவாசகப் பெருமான் இருவரையும் சேர்த்து எழுதியுள்ளார்.

திருநாவுக்கரசர் வரலாறில் ஓரிடம்:
போற்றச் சிவனிருக்க
போதாத காலமென
அக்காள் பொருமினாள்
நெஞ்சம் மறுகினாள்.
விரல் பத்தும் வேறொன்றும்
செய்வதில்லை
அருள்பற்றும் அவர்திருக்கை
ஆண்டவனைத்தொழுதது
விழியிரண்டும் தம்பியை
மீட்டுத்தாவென அழுதது.
இப்படி ஒவ்வோர் அடியார் கதையும் இவர் கவிநடையில் உயர்ந்தோங்கக் காண்கிறோம். அறுபத்து மூவர் படங்களும் இடம் பெற்றுள்ளன. நல்ல தாளும் கட்டமைப்பும் பாராட்டுக்குரியன.

வாசிக்கும் போது, ‘காட்சிப் பிம்பங்களாக விரிந்து, ஒளிப்படத்தின் உன்னதத்தோடு நம்மை பயணிக்க வைக்கிறது, இவரின் ஆன்மிகம் கலந்த இந்த இலக்கியப் படைப்பு’ என, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாராட்டியுள்ளமை பொருத்தமானது. அறுபத்து மூவர் வரலாற்றை எளிதாக கற்று அறியவும், கவிதை உணர்வை வளர்க்கவும், புதுக்கவிதை பயில்வோருக்கு வழிகாட்டியாகவும் நூல் அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

– கவிக்கோஞானச்செல்வன்,

நன்றி: தினமலர், 30/7/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *