80 ஆண்டு கால தமிழ் சினிமா
80 ஆண்டு கால தமிழ் சினிமா (1931-2011) முதல் பாகம், சித்ரா லட்சுமணன், காயத்ரி பிரிண்ட்ஸ், 2வது தளம், பாரதிதாசன் காலனி, சென்னை 78, பக்கங்கள் 558, விலை 500ரூ.
தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) பற்றிய செய்தியில் தொடங்கி எம்.ஜி.ஆர். மரணம் (1987) வரை தமிழ் திரையுலகில் நிகழ்ந்த பல முக்கியமான சுவையான பலரும் இதுவரை அறிந்திடாத செய்திகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ஆதித்தன் கனவு படத்தில் நாயகனாக நடித்த டி.ஆர். மகாலிங்கத்தின் மீது கல்லெறிவதாக ஒரு காட்சி எடுக்கப்பட்டது. எல்லாரும் கல்லெறியும்போது ஒரு துணைநடிகர் மட்டும் டி.ஆர்.மகாலிங்கத்தின் பரம ரசிகராக இருந்ததால் கல்லெறியாமல் நின்றுவிட்டார். அவர் பெயர் கோவிந்தராஜன். பின்னாளில் சீர்காழி கோவிந்தராஜன் என்று பெரும்புகழ் பெற்றவர் அவர். இப்படிப்பட்ட அரிய தகவல்கள் ஏராளமாக உள்ளன. இந்த எண்பதாண்டு தமிழ் பேசும்பட வரலாற்றில் தமிழின் எல்லா கலைஞர்களும் தயாரிப்பாளர்களுக்கும் ஏதோ ஓர் அளவில் இந்நூலில் இடம் பெற்றுள்ளார்கள். கால வரிசைப்படி இந்நூல் எழுதப்பட்டிருந்தால் இதன் பயன் இன்னும் கூடியிருக்கும். இந்நூல் வெறும் தகவல் திரட்டாக இல்லாமல் திரைப்படத்துறையினர் பலருடைய வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை ஒரு கலைடாஸ்கோப் போல் பார்க்க வைக்கிறது. எண்பதாண்டு தமிழ் சினிமா கலைஞர்கள் வாழ்வின் நேர்மையான குறுக்கு வெட்டுத் தோற்றம் இந்நூல்.
—-
பொறுப்புமிக்க மனிதர்கள், மனு ஜோசப், க. பூரணசந்திரன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக்கங்கள் 418, விலை 250ரூ
மனு ஜோசப் எழுதிய சீரியஸ் மென் நாவலின் தமிழாக்கம். இயற்பியல் துறையில் உயர் ஆய்வு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள உயர்சாதியினர், பிற தலித்துகளின் அறிவுப்புலம் குறித்துப் பேசும் ஏளனமும், அங்கு சாதாரண எழுத்தனாக இருக்கும் தலித் பத்துவயது மகனை ஆராய்ச்சிகளுக்கும் மேலான அறிவுப்புலம் உள்ளவனாக நிரூபிக்கும் முயற்சியும்தான் கதை. இதற்காகக் கேள்வித்தாளை வஞ்சகமாகப் பெறும் அளவுக்குச் செல்வதாகக் கதை செல்கின்றபோது இது தலித் இலக்கியமா? அல்லது தலித்துக்கு எதிரான இலக்கியமா என்று ஐயம் கொள்ளச் செய்கிறது. காதல், காமம், அறிவு எல்லாவற்றையும் வெளிப்படையாக அழகான மொழிக்கட்டமைப்பில் முன் வைப்பதுதான் இக்கால இலக்கிய உத்தி. இந்த நாவலில் அது முழுமையாக இருக்கிறது. நாவல் 2011ஆம் ஆண்டுக்குரியது. ஆனால் மொழிபெயர்ப்பில் பல சொற்களில் பழமையின் நிழல் கவிந்துள்ளது. நன்றி: தினமணி 20 பிப்ரவரி 2012.