புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்,
புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும், ப.கு.ராஜன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 545.
அறிவியலை எந்த அளவுக்கு எளிமையாகக் கூற முடியுமோ அந்த அளவுக்கு எளிமையாகக் கூற வேண்டும். ஆனால் அதற்கு மேலாக எளிமைப்படுத்த முயற்சி செய்யக்கூடாது என்று எழுதினார் ஐன்ஸ்டீன். புரட்சியில் பகுத்தறிவு என்ற புத்தகத்தில் ப.கு.ராஜன் அதைச் சரியாகச் செய்துள்ளார். அறிவியல் அதிலும் இயற்பியல்… சிக்கலானது. தத்துவம், அதனினும் சிக்கலானது. தத்துவ விசாரணைகளும் அறிவியல் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று சமமாகவும் முரண்பட்டும் வளர்ந்ததை வரலாற்று ஆதாரங்களுடன் நின்று தொகுப்பது கடினமான முயற்சி, அதைச் சொல்லும் திறன் தமிழ் மொழிக்கு இல்லை என்று பேதை உரைத்தான் என்று பாரதி கோபப்படுவார். ஆனால் ப.கு.ராஜன் சரியான தமிழ்ச் சொல்லாய் கோர்த்துச் சொல்லி இருப்பது மொழி வளத்தையும் அவரது திறத்தையும் காட்டுகிறது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒருமுறையவது சந்தேகி என்கிறார் டெஸ்கார்டஸன். அத்தகைய சந்தேகத்தில்தான் தத்துவமும் அறிவியலும் பிறக்கின்றன. தத்துவ மரபு ஆரம்ப காலத்தில் கிரேக்கத்தைச் சார்ந்தது. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்ற வரிசை அது. உலகு, மனிதன், கடவுள் என்ற மூன்று வார்த்தையைச் சுற்றியே தத்துவம் இருந்தது. அதன் பிறகு வந்த ஹெகல், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய மூவரும் அதை வர்க்கம் சார்ந்த தத்துவமாக வடிவமைத்தனர். உயிரினங்களின் தோற்றம் பரிணாம வளர்ச்சியால் ஏற்பட்டது என்ற டார்வினிசமும், இது வர்க்கங்களாய் பிரிந்து கிடக்கிறது என்ற மார்க்சியமும் ஒரே காலகட்டத்தில் அரங்கத்துக்கு வருகின்றன. அதுவரை இருந்த மதவாதச் சிந்தனைகளை, நம்பிக்கைகளை இந்த அறிவியலும் தத்துவமும் இணைந்து எப்படிச் சிதைத்தது என்பது குறித்த ஆழமான நூல்தான் இது. இந்த நூலில் சாக்ரடீஸ் முதல் நாராயண குரு வரை, மார்க்ஸ் முதல் அரவிந்தர் வரை அனைவரும் வந்துபோகிறார்கள். கடினமான விளக்கங்கள் வரும் இடத்தில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் கதைகளைக் கோடிட்டு காட்டி விளக்குகிறார். அனைத்துக்கும் மேலாக வறட்டுவாதம் இவரிடம் இல்லை. எல்லா மதங்களுக்கும் இருக்கிற வறட்டுவாத நோய் என்பதில் இருந்து மார்க்சியமும் முழுமையாக விடுதலை பெற்ற ஒன்று என்று சொல்வதற்கு இல்லை. இத்தகைய வறட்டுவாதத்துக்கு எதிரான தனது இலகுத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள மார்க்சியமும் தொடர்ந்து உள்ளார்ந்து போராடத்தான் வேண்டி இருக்கிறது என்பதைச் சரியாகவே சொல்கிறார். யாருக்கும் மகுடம் சூட்டிவிடாமல் மகத்தான மாற்றத்துக்குக் காரணமான அனைவரையும் நம் மனக்கண் முன் நிறுத்துகிறது இந்த புத்தகம். தமிழில் எப்போதாவதுதான் தத்துவம் சார்ந்த கனமான புத்தகங்கள் வரும். அதில் இதுவும் ஒன்று. – புத்தகன். நன்றி: ஜுனியர்விகடன், 16 ஜனவரி 2013.