இமய குருவின் இதய சீடன்
சூரியன், சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்தி சிவா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 176, விலை 120 ரூ.
சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் என, இதுவரை 10 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் சாந்தகுமாரி சிவகடாட்சத்தின் புதிய நாவல் சூரியன். கிராமம், நகரம் என, இரண்டு வழிகளில் பயணிக்கும் இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களை, அவரவர் இருப்பிடத்திற்கே உரிய குணங்களோடு, ஒப்பனை இன்றி படைத்துள்ளார் ஆசிரியர். இன்றைய, இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப் போக்கின் மீது தனக்குள்ள வருத்தத்தை, ‘சூரியன்’ நாவலில் ஆழமாக பதிவு செய்துள்ளார். நாவல் பிரியர்களுக்கு நல்ல தீனி.
—
மனிதப் போக்கு ஒரு பார்வை, என் ராஜசேகர், சேகர் பதிப்பகம், பக்கம் 192, விலை 125 ரூ.
ஒவ்வொரு தலைப்பின் தொடக்கத்திலும் ஒரு கதை அல்லது நிகழ்ச்சி என்று துவங்கி, பல தகவல்களைத் தரும்வகையில் அமைந்துள்ளது இந்த நூலின் போக்கு. 15 தலைப்புகளில் மனிதனின் பல்வேறு தன்மைகளைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. இந்தக் கட்டுரைக்குள் ஊடுநூலாய் உறைந்து கிடக்கும் நகைச்சுவை, படிப்பு ரசனையைத் தூண்டுகிறது. பதற்றம் இருந்தால், எவ்வளவு திட்டமிட்டிருந்தாலும் செயல்படுத்த முடியாமல் போய்விடும் என்பதற்கு நூலாசிரியர் கொடுத்திருக்கும் விளக்கமும், அதற்கு அண்ணல் காந்தியின் வாதாடும் திறனைக் குறிப்பிட்டிருப்பதும் மிகவும் பொருத்தம். மொத்தத்தில் இந்தப் புத்தகம் ஓர் அனுபவத் திரட்டு எனலாம்.
—
இமய குருவின் இதய சீடன், ஸ்ரீஎம், மஜன்டா பதிப்பகம், கொடகு, கர்நாடகா – 571201, பக்கம் 512, விலை 295 ரூ.
முழுமையான அர்ப்பணிப்பு, சிதறாத கவனம், உண்மையான நோக்கம் ஆகியவற்றுடன் கேரளத்து இளைஞன் ஒருவன், எப்படி ஆன்மிகத்தின் அடிவாரத்திலிருந்து உச்சத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டான் என்பதை சுவையாகச் சொல்கிறது இப்புத்தகம். இந்நூலாசிரியன் குரு, பாபாஜி மக்களுக்குச் சொல்லும் செய்தியே இப்புத்தகம். அச்செய்தி அனைவரும் பின்பற்றவேண்டிய அருமை, பெருமை மிக்கது. ‘இயல்பாக இரு, எளிமையாக இரு, அலட்டாதே, ஆர்ப்பரிக்காதே, உலகத்தில் அடுத்தவர்போல் வாழு, பெருமையை வெளிப்படுத்த விளம்பரம் தேவையில்லை, அணுகுபவர்கள் அவர்களாகவே புரிந்துகொள்வர், நண்பர்களுக்கும், உடனிருப்பவர்க்கும் எடுத்துக்காட்டாக இரு. ஆனந்தமாகவும் எப்போதும் விழிப்புணர்வுடனும் வாழலாம்.’ இந்நாளில் ‘ஸ்ரீஎம்’ என்று அறியப்படும் யோகி, திருவனந்தபுரத்தில் மும்தாஜ் அலிகான் என்ற பெயரோடு வாழ்ந்தவர். தம் ஒன்பதாம் வயதில் நிகழ்ந்த அற்புதம் துவங்கி, ஆன்மிக ஞானம் வரப்பெற்றவராய் இமயம் அடைந்து, குருவருளால் பெற்ற அனுபவங்களை வியக்கும்படி, இந்நூல் விவரிக்கிறது. ஒரு யோகியின் சுயசரிதை என்ற முறையில் அமைந்த நூலில் மானுட சமுதாயம் அறிந்து உணரத்தக்க அறக்கருத்துகளும், சமய நல்லிணக்கக் கோட்பாடுகளும் நிரம்பியுள்ளன. தமிழில், டாக்டர் பி. உமேஷ் சந்தர் பால், ஆக்கம் செய்திருப்பதாக நூலில் உள்ளது. இயல்பான எளிய நடையில் எவரும் படித்து அறியுமாறு எழுதியுள்ளமை பாராட்டிற்கு உரியது. படித்து பயன் பெறுக. – கவிக்கோ ஞானச்செல்வன் நன்றி: தினமலர் 30-09-12