என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை – 32, விலை 100 ரூ.

நீங்கள் இந்தத் தேசத்தை நேசிப்பவராக இருந்தால், ஏழைகள் மீது கருணை கொண்டவராக இருந்தால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் என்றால், இலவசங்களை அள்ளிக்கொடுப்பதாகச் சொல்லி வாக்கு கேட்டு வருபவர்களை நிராகரியுங்கள் என்று மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார் மாலன். ஜன்னலுக்கு உள்ளே இருந்துகொண்டு என்னதான் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தாலும், அவையெல்லாம் அம்பலம் ஏற முடியாத சமுதாயக் கட்டமைப்பில் நாம் உழன்றுகொண்டிருக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்தவர்தான் மாலன். இருந்தாலும் ‘இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்னும் மகாகவியின் கட்டளையைச் சிரமேற்கொண்டு எழுதுகிற அவரால் இதையெல்லாம் சொல்லாமலிருக்க முடியவில்லை. ‘நம் காவலர்கள் மூர்க்கமான விலங்குக் குணங்களும், முட்டாள்தனமான கோமாளி மனமும் ஏதோ ஒரு விகிதத்தில் கலந்து செய்த உயிரினங்கள் என நம் சினிமாக்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்களுக்குள்ளும் ஒரு மனிதன் இருக்கிறான். அடுத்தமுறை சந்திக்கும்போது அவருக்கு ஒரு குவளைத் தண்ணீராவது கொடுங்கள்’ என்று எழுதுகிறார். அது அவர்களது துன்பங்களை நாம் அறிந்துகொண்டோம் என்பதன் அடையாளமாம். ‘மனிதர்களைப் புறந்தள்ளிவிட்டுக் கடவுளை மட்டும் கட்டிப்பிடித்துக்கொள்கிற காரியத்துக்குப் பெயர்தான் பக்தியா? யோசித்துப் பார்த்தால் அது பக்தியில்லை. ஒரு வகையில் நாத்திகம்’ என்கிறார் ஒரு கட்டுரையில். ரயில் பயணத்தின்போது, சக பயணி ஒருவர் “நீங்கள் காந்தியைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்கும்போது, “காந்தியைக் கொன்ற தேசத்தில்தான் நான் பிறந்தேன். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன்” என்று பதிலளிக்கும் மாலனின் மனவேதனையை வாசகனும் நன்றாக உணரமுடிகிறது. ‘நான் சந்நியாசி அல்ல. பத்திரிகைக்காரன். மௌனித்து விடுவதை விடப் பெரிய பாதகம் வேறொன்றில்லை’ என்று பேசுகிற ஆசிரியரின் உருவம் ‘மோதி மிதித்துவிட’ச் சொன்ன பாரதியையே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. மணியான 41 கட்டுரைகள், படித்து முடித்த பின்னும் பலமணி நேரம் சிந்தனையைத் தூண்டிக்கொண்டேயிருக்கும்.   நன்றி: கல்கி 07-10-12        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *