போர்க்குற்றவாளி

பண்பாட்டு அரசியல், சி. சொக்கலிங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட். அம்பத்தூர், சென்னை 98. பக்கங்கள் 244, விலை 125 ரூ.

தமிழக கலை இலக்கியப் பெருமன்றத்தின், குமரி மாவட்டக் குழுவில் பிரதான அங்கம் வகிக்கும் இந்நூலாசிரியர் கடந்த 30 ஆண்டுகளில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வகுப்பு வாதம், ஊடகம், மாற்றப்பண்பாடு, மதிப்பீடு என்று நான்கு தலைப்புகளில் அமைந்திருக்கும் கட்டுரைகள் யாவுமே நயமானவை. வானியல் முகமூடியில் ஜோதிட பூதம் (வகுப்பு வாதம்), ‘இருவர்’ திரைப்படத்தில் திராவிட இயக்கப் பின்னணி போலியும் புனைவும் (ஊடகம்), நவீன இந்தியாவில் பண்பாட்டு உணர்வு பற்றி கே.என். பணிக்கர் (மாற்றுப் பண்பாடு), கல்வி பற்றிய மூன்று கட்டுரைகள் (மதிப்பீடு)… இந்தக் கட்டுரைகள் வாசகர்களின் சிறப்பான கவனத்திற்கு உரியவை.  

 

சாளுக்கியனின் சபதம், முகிலன், சஞ்சய் புக்ஸ், நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை  – 75. பக்கங்கள் 280, விலை 140 ரூ.

அமுதசுரபி இதழும், சுரதா பிலிம்ஸும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்ற இந்த சரித்திர நாவலில் சோழ மன்னன் ராஜகேசரி வீரராஜேந்திரனுக்கும் மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவ மல்லனுக்கும் இடையே நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளையும், அக்காலச் சமுதாய சூழல்களையும் ஆசிரியர் திறம்பட விவரிக்கிறார். சரித்திர நாவல் பிரியர்களுக்கு நல்ல விருந்து. – சிவா  

பண்டைய சித்தர்களும் புதுச்சேரி சித்தர்களும், ஆர் மணவாளன், கண்ணம்மா பதிப்பகம், 144, மகாலட்சுமி இல்லம், லாஸ்பேட்டை மெயின் ரோடு, பாக்கு முலையான்பட்டு, புதுச்சேரி – 8, பக்கங்கள் 254, விலை 175 ரூ.

சித்தர்கள் ஜாதி, சமயம், மொழி, இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள், ஒன்றே குலம், ஒருவனே தேவன், உள்ளமே கோயில் என்பதே இவர்களின் போதனை. பண்டைய சித்தர் பகுதியில் திருமூலரிலிருந்து வள்ளலார் வரை 40 சித்தர்களைப் பற்றியும், புதுச்சேரி சித்தர்கள் என்ற பகுதியில் கழுவெளிச் சித்தரிலிருந்து, ஏகாம்பரர் சித்தர் வரை எழுதப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களில் பெங்களூரில் சித்தியடைந்தவர்கள் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. பல இடங்களுக்கும், பற்பல ஊர்களுக்கும் நேரில் சென்று தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார் ஆசிரியர். அப்பார் சுவாமிகள், வியோமா சுவாமிகள், அக்கா சுவாமிகள் எனப் புதிய பெயர்களோடு சில சித்தர்கள், மவுலாசாகிப் என்று ஒரு முஸ்லிம் சித்தர் நூலில் இடம் பெற்றுள்ளார்கள். மண்ணுருட்டி சுவாமிகள் என்ற வினோதமான பெயர் கொண்டவரும் உண்டு. சித்தர்களின் வாழ்க்கை, செய்த அற்புதங்கள் பற்றி ஆவல் கொள்ள அனைவரும் படிக்கவேண்டிய நூல் இது. – கவிக்கோ ஞானச்செல்வன்.  

போர்க்குற்றவாளி, அக்னி சுப்பிரமணியம், மனிதம் வெளியீடு, பி 4-2/599, அண்ணா சாலை, சென்னை – 6, பக்கங்கள் 352, விலை 300 ரூ.

இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்துள்ளது என்ற அறிவிப்போடு ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கை, கடைசி கட்டப் போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மனித இனத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் என, கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு நிரூபித்துள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.   நன்றி: தினமலர் 15-01-12    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *