கனவு ஆசிரியர்
கனவு ஆசிரியர், தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை ரூ. 90.
‘உங்கள் வாழ்க்கையில் யார் மிக முக்கியமான வழிகாட்டி என நினைக்கிறீர்கள்?’ என்று, வர்த்தக இதழ் ஒன்று பெரிய தொழில் அதிபர்கள் எட்டுப் பேரிடம் கேட்டது. அதில் ஆறு பேர், தங்களது பள்ளிக்கூட ஆசிரியர்கள் என்று சொன்னார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் முதல் ஹீரோ, அவர்களது ஆசிரியர்கள்தான். நல்லதும் கெட்டதுமான பல நடவடிக்கைகள் பள்ளியில் இருந்துதான் தொடங்குகின்றன என்பதால், அதற்குக் காரணமானவர்கள் ஆசிரியர்களே. அதனால்தான் தெய்வத்துக்கும் முன்னதாக ‘குரு’ மரியாதை செய்கிறது இந்த சமூகம். அத்தகைய ஆசிரியர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி இருக்கிறார்கள், எப்படி இருக்கவேண்டும் என்பதை பல்வேறு இலக்கிய ஆளுமைகள் தங்களது அனுபவங்களின் மூலமாகச் சொல்லும் புத்தகம் இது! ‘சுமார் 100 ஆசிரியர்கள் என்னை உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது அந்த 100 ஆசான்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நான் பட்ட கடனை அவர்கள் திருப்பிக் கேட்கமாட்டார்கள். அது அவர்களுடைய பெருந்தன்மை. விலை மதிப்பற்ற செல்வத்தையும் கொடுத்து, பெற்றவர்கள் உயர்வதே வருபொருளாகக்கொண்டு வாழ்கிற கொடைத்தொழில், ஆசிரியர் பணி ஒன்றேயாகும். அவர்கள் செய்வது தொழில் அன்று… பணி அல்லது தொண்டு. அவர்கள் பெறுவது சம்பளம் அல்ல. அது சன்மானம்’ என்று சொல்லும் எழுத்தாளர் பிரபஞ்சன், தன்னுடைய ஆசிரியர்கள் ஒவ்வொருவரையும் வர்ணிப்பது தனித்தனிக் குறும்படம். ஓர் உயர்ந்த இடத்தில் ஆசிரியர் நின்றுகொண்டு பேசிக்கொண்டே இருப்பதையும், மாணவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கும் பழக்கத்தையும் கல்வியாளர்கள் அனைவருமே கிண்டல் செய்கிறார்கள். ‘சார்… போதும்! தாங்க முடியலை’ என்று தன்னுடைய 30 ஆண்டுப் பணியில் ஒருமுறைகூட மாணவர்கள் கிண்டல் அடித்து நிறுத்தாததை சா. மாடசாமி குற்றவுணர்வுடன் பார்க்கிறார். ஆசிரியரின் பேச்சுக்கு இடையில் மாணவர்கள் குறுக்கிடுவதுதான் சரியானது என்றும் சொல்கிறார். ‘ஏரி முழுக்க ஆசிரியரே ஒற்றைப் படகு செலுத்துவதை யார் விரும்புவார்? கரையில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கா மாணவர்கள்? ஏராளமாக சிறு சிறு படகுகள் மிதக்கும் ஏரியைத்தான் நான் கனவு காண்கிறேன். வகுப்பறையை எளிய திறமைகளின் சந்திப்பாக மாற்றுபவர்தான் என் கனவு ஆசிரியர்’ என்று மாடசாமி சொல்லும் உதாரணமே உண்மையானது. எல்லா ஆசிரியர்களும் ஒரே புத்தகத்தில் இருந்துதான் பாடம் நடத்துகிறார்கள். ஆனால், நடத்தும் முறையால் மாணவர்களது மனதைக் கொள்ளை கொள்பவர்கள் சிலர்தான். தன்னுடைய ஆங்கில ஆசிரியரைப் பற்றி எழுத்தாளர் பாமா, ‘கல்லூரியில் ஆங்கில ஆசிரியையின் கற்பித்தல் எங்களை மந்திரத்தால் கட்டிப்போட்டது. அவ்வளவு அற்புதமான வகுப்பு அது. ஷேக்ஸ்பியரையும் அவரது நாடகங்களையும் தேடிப் பிடித்துப் படிக்கத் தூண்டியது. அவரின் கற்பித்தல் முறை, மார்க் ஆண்டனி, கிளியோபாட்ராவின் காதலில் நாங்கள் கிறங்கிப் போனோம். கிளியோபாட்ரா இறந்த காட்சியை நடத்திய நாளன்று நாங்கள் அனைவரும் கறுப்புச் சேலை கட்டிக்கொண்டு கல்லூரிக்குச் சென்றோம். ஆசிரியை அசந்தே போய்விட்டார். அவ்வளவு ஈடுபாட்டோடு எங்களை கதைக்குள் அவர் அழைத்துச் சென்றார்’ என்று எழுதி இருப்பதைப் படிக்கும் இன்றைய மாணவர்களுக்கு ஏக்கமாக இருக்கும். இது, ஆசிரியர்கள் முதலில் படிக்கவேண்டிய புத்தகம்! – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 14-11-12