சுக்கிர நீதி
சுக்கிர நீதி, பண்டிதமணி கதிரேசச்செட்டியார், பாரி புத்தகப் பண்ணை, சென்னை 108, பக்கங்கள் 400, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-5.html
அசுர குருவான, சுக்கிரர் இயற்றிய ஔநசம் என்ற சுருக்கத் தொகுப்பு சுக்கரநீதி. வேதம், அறநூல்களுக்கு முரணாக இல்லாமல், அரசாட்சி மற்றும் பொருளீட்டம் குறித்த தகவல்களை கூறுவது பொருணூல், தமிழில், இக்கருத்து வரவேண்டும் என்ற விருப்பத்தில், இதை பண்டிதமணி மொழிபெயர்த்து அளித்திருக்கிறார். வடமொழிப் புலமை உடையவரை அருகில் வைத்துக் கொண்டு, அவர் இந்நூலை உருவாக்கிய தகைமை, போற்றுதற்குரியது. இந்த நூலிற்கு, சிறப்பு பாயிரம் எழுதிய தமிழ்த் தாத்தா உ.வே.சா., வடமொழி, தென்மொழி, ஆங்கிலப் பயிற்சி கொண்டவர் பண்டிதமணி எனக் குறிப்பிட்டு, சிவனடியவரை சிவனென மதிக்கும் மாசிலாப் புகழ் கதிரேசன் என்று குறிப்பிடுகிறார். தன் முன்னுரையில் பண்டிதமணி, பொருள் நூல் தமிழில் இல்லாத குறையை நீக்க, இந்த நூலை மொழியாக்கம் செய்தேன் என்று பதிவு செய்கிறார். நூலாசிரியர் சுக்கிராச்சாரியார் அசுர குரு, கள், காமம், சூது ஆகியவற்றை விலக்க கூறியபோதும், சிறிதளவு உண்ணப்படும் கள், மதிநுட்பத்தையும், தூய அறிவையும், அஞ்சாமையையும், மன உறுதியையும் தரும் என்று குறிப்பிட்டது அசுரர்களை திருப்திப்படுத்த எழுதிய கருத்து என்றும், அதேசமயம் எச்செயல் எல்லாராலும் பழிக்கப்படுகிறதோ அது மறம் என தொடர்ச்சியாக விளக்கிய சுக்கிராச்சாரியார், மாண்பையும் குறிப்பிடுகிறார். தமிழ் நலம் வளர்க்கும் தகைமை கொண்ட இந்த நூலில், திருக்குறள் மற்ற இலக்கிய நூல்களின் கருத்துக்கள், ஒப்புமையாக கூறப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் அறம், பொருள், இன்பம் குறித்த கருத்து பொதுவாகவும், அரச நெறிகள் பொதுவாகவும் இருந்தன என்பதை பல கருத்துக்கள் மெய்ப்பிக்கின்றன. இந்த நூலில் காணப்படும் கருத்தைக் கவரும் கருத்துக்களில் சில- அரசர், தான் நம்புதற்குரிய புதல்வர், உடன் பிறந்தார், மனைவி, அமைச்சர், மற்றை வினை செய்வார் என்னும் இவருள் எவர்பாலும், எப்பொழுதும் மிகவும் நம்பிக்கை கொள்ளலாகாது. கிராமத்தில் வாழும் மனிதர்கள், போக்குவரவிற்குரிய வழியிடத்தை ஆமை முதுகுபோல் நடுவிடம் உயர்த்தியும், இரு மருங்கும் அழகிய வரம்பெடுத்தும் அமைதல் வேண்டும். ஒவ்வொரு வீட்டின் பின்புறத்திலும் மலங்கழித்தற்கு உரிய இடம் தேவை. குப்பாயம் முதலிய தைத்தற்கண் உள்ள அறிவு, மயிர் களைதல், இல்லத்தில் கண் உள்ள பாண்டம் முதலியவற்றை, தூய்மையுற விளக்கும் அறிவு ஆகியவை, 64 கலைகளில் அடக்கம். கடன் கொடுத்தவன், தன் முதலுக்கு நான்கு மடங்கு மிகுதியாக வட்டியைத் தந்திருந்தால், முதலைத் திருப்பித் தரவேண்டியதில்லை என்ற தகவலும் உள்ளது. இப்படி அரியதாக உள்ள தகவல்கள், தமிழில் வந்தபோதும், கடந்த பல ஆண்டுகளாக, சரியாக இக்கருத்துக்கள், ஏன் வெளிவரவில்லை என்பது தெரியவில்லை, அதுவும் ஆங்கில மேலாதிக்கம் கொண்டவர்கள் செயலோ என்று எண்ண வைக்கிறது. பல்வேறு துறைகளிலும், தலைமை வகிக்கும் எல்லாரும் படிக்க வேண்டிய நூல் இது. – எம். ஆர். ஆர். நன்றி- தினமலர், 17 பிப்ரவரி 2013.