ஆகஸ்ட் 15
தடம்பதித்த மாமனிதன் ரசிககமணி டி.கே.சி., தி. சுபாஷிணி, மித்ரஸ் பதிப்பகம், விலை 250ரூ.
முருகனுக்கா அறுபதாம் கல்யாணம்?, பாளையங்கோட்டை கிறிஸ்தவர்கள் மாநாடு ஒன்றில் ரசிகமணி ஏசுநாதரின் உபதேசங்களை விளக்கிப் பேசினார். அதைக் கேட்ட பாதிரியார் ஒருவர் “கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் ஏசுவின் போதனைகளை டி.கே.சி.யிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இதயபூர்வமாக அவற்றை உணர்ந்து இருக்கிறார்” என்றார். கம்பராமாயணத்தை பெரியார் எதிர்த்து எரித்துக் கொண்டிருந்த நேரம். அவர் குற்றாலத்துக்கு வந்திருந்த செய்தியை ரசிகமணியிடம் சொன்னார் எஸ்.வி.எஸ். உடனே, ‘அடடா, நம் வீட்டுக்கு உணவருந்த அழைத்து வந்துவிடுங்கள்’ என்றாராம் டி.கே.சி. பெரியாரும் அவருடைய விருந்தோம்பலை மதித்து ‘மதியம் வருகிறேன்’ என்று சொல்லி அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். ரசிகமணியின் அறுபதாம் கல்யாணம் இலஞ்சி முருகன் கோயிலில் நடந்தபோது கலந்துகொண்டார் பெரியார். தொண்டர்குழாம் தடுத்துப் பார்த்தது. ஆனால் பெரியார் ‘அறுபதாம் கல்யாணம் முதலியாருக்குத்தானப்பா, முருகனுக்கு இல்லையே? என்று கேட்டுவிட்டு விழாவில் கலந்து கொண்டாராம். இப்படி அருமையான பல நிகழ்வுகளைப் பற்றி வித்வான் ல. சண்முகசுந்தரம், தொ.மு. பாஸ்கர தொண்டமான், டி.டி. திருமலை, கு. அழகிரிசாமி போன்ற பெருமக்களின் நினைவுப் பதிவுகளோடு ரசிகமணியின் எழுத்துகளையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். கால வெள்ளத்தில் சற்றே பின்னோக்கிச் சென்று இலக்கிய வளத்தையும் பண்பாட்டையும் அனுபவிக்க உதவுகிற அரிய கருவூலம் இந்நூல்.
—–
ஆகஸ்ட் 15, குமரி எஸ். நீலகண்டன், சாய்சூர்யா, விலை 450ரூ.
காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட போது, இறப்பதற்கு முன் ‘ஹேராம்’ என உச்சரித்தார் என்ற செய்தி, உலகம் முழுவதும் பரவிட்டது. ஆனால் அந்நேரத்தில் பாபுஜியின் அருகிலேயே இருந்த அவருடைய செயலாளர் கல்யாணம், இந்தத் தகவல் உண்மையானதல்ல என்று பதிவு செய்திருக்கிறார். ஒரு கூர்மதியுடைய பத்திரிகையாளரின் ஊகத்தின் அடிப்படையிலான செய்தி இது என்றும் நினைவுச் சின்னமாக ஒரு தவறானது, சத்தியத்தின் திருத்தூதர் வாயில் திணிக்கப்பட்டு விட்டது என்றும் பதிவு செய்திருக்கிறார். பாபுஜிக்கு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு எழுதப்பட்ட கடிதங்களில் பலர் பல விதமாக முகவரியிட்டு எழுதினார்கள் – அவற்றுள் ஒன்று ‘மகாத்மா காந்தி, இந்திய அரசின் சர்வாதிகாரி புதுதில்லி.’ இதுபோல் ‘லார்டு மகாத்மா காந்தி, பாம்பே, டெல்லி, இந்தியா’என்றும் முகவரியிடப்பட்டனவாம். இது கல்யாணம் தரும் தகவல். ‘பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின் இருபது வருடங்களுக்கு இந்தியாவில் இரும்புக் கரத்துடனான ஒரு சர்வாதிகார ஆட்சி வேண்டும். அதன் மூலமே இங்குள்ள கருத்து வேறுபாடுகளையும் உட்பூசல்களையும் ஒழிக்க இயலும்” என்று 1946ஆம் அண்டிலே சொன்னவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இப்படியான தகவல்களோடு உள்ள ஆகஸ்ட் 15 புதினம், வரலாற்றுப் பின்னணியில் உருவானது என்று முன்னுரைக்கிறார் ஆசிரியர் குமரி எஸ். நீலகண்டன். விலைமதிப்பற்ற காந்திய சகாப்தத்தின் பதிவுகளை அவருடைய செயலாளர் கல்யாணம் தரும் ஆதாரங்களோடு ஆகஸ்ட் 15 நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். கற்பனைப் புதினங்களை எல்லாம் விடச் சுவையும் பயனும் நிறைந்த வாசிப்பைத் தருகிற நூல். சுப்ர.பாலன். நன்றி: 5/5/2013.