சங்கர காவியம் – பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு
சங்கர காவியம் – பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு, டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், விலை 250ரூ.
எதையுமே கதை கட்டுரைகளைப் படிப்பதைவிட நாடக வடிவமாக்கித் தந்துவிட்டால் போதும். அப்படியே எடுத்துச் சுளைசுளையாய் விழுங்குகிற மாதிரி மனத்தின் உள்வாங்கிக் கொண்டுவிடலாம். இந்தக் கலையில் தாம் வல்லவர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் டால்மியாபுரம் கணேசன். நடமாடும் தெய்வம் என்று பெருமையோடு வழிபட்ப்பட்ட காஞ்சி மகாப்பெரியவாளைப் பற்றிய பல நிகழ்வுகளைப் பலரும் பலவாறாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் ஆன்மிக அற்புதம் அவர். இனிமேல் மனம்போன வாக்கில் புனைகளைகளும் ஒருவாகி விடக்கூடும். அப்படி அபாயம் நேரிட்டுவிட வாய்ப்பில்லாமல் பொறுப்புள்ளவர்கள் ஸ்ரீசரணரின் வாழ்க்கை நிகழ்வுகளை மிகைப்டுத்தாமல் எவ்வகையிலேனும் பதிவு செய்து வைப்பது நல்லதுதான். தொலைக்காட்சித் தொடராக வெளிவரக்கூடிய முறையில் 208 காட்சிகளாக சங்கர காவியம் என்னும் புனிதமான தலைப்பில் மகாப் பெரியவாளின் அர்த்த முள்ள வாழ்க்கை அனுபவங்கள் சிலவற்றை நாடக வடிவில் அழகுறத் தந்திருக்கிறார் ஆசிரியர். பல சான்றோர்கள் முன்பே எழுதிவைத்துள்ள நூல்களிலிருந்து நாடக வடிவில் உருவாக்கக்கூடியவை என்று தாம் கருதிய சில பகுதிகளை மட்டுமே நாடகமாக்கியிருப்பதாகவும் சொல்கிறார். வயதான சமையல்காரர் ஒருவர் ஏதோ கொஞ்சம் மளிகை சாமான்களைத் திருடிவிட்டார் என்று சொல்லி வீட்டுக்காரர், அறைக்குள் தள்ளிப் பூட்டி வைத்துவிடுகீறார். எப்படியோ விவரமறிந்த பெரியவர் அந்த வீட்டுக்காரரைப் பார்த்துக் கேட்பதாக வருகிற பகுதி சிந்தனையைத் தூண்டக்கூடியது. அவனுக்கு நியாயமான சம்பளத்தையும் மத்த வசதிகளையும் நீ ஒழுங்காகக் குடுத்திருந்தா அவன் ஏன் இப்படித் திருடணும்? அவனுடைய உழைப்பைத் திருடின நீதான் முதல் குற்றவாளி… உனக்கு யார் தண்டனை கொடுக்கறது? மகாராஷ்டிராவில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது கையில் கோலோடு தடுமாறிக்கொண்டிருந்தபோது கையில் கோலோடு தடுமாறிக்கொண்டே நடந்துபோன கிராமத்துப் பெரியவர் ஒருவருக்குக் கருணை காட்டிய காஞ்சி மகானின் மனிதாபிமானமும் நெகிழ வைப்பது. வழியில் பெரியவாளை அடையாளம் கண்டுகொண்ட பேருந்து நடத்துநர் ஒருவரிடம் நேக்கு ஒரு உபகாரணம் பண்ணணுமே? என்று கேட்கிறார் பெரியவர். உபகாரமா? உத்தரவு போடுங்க சாமி, என்கிறார் அந்த கண்டக்டர். முன்னே சொன்ன கிராமத்துக் கிழவரைக்காட்டி, இவரை அழைச்சுண்டுபோய் பக்கத்து ஊர்லே விட்டுடறியா? ஒன்னோட சொந்தக் காசிலே இவருக்கு ஒரு டிக்கட் போட்டுக்கணும்? செய்வியா? என்று உத்தரவாகிறிது.. சொந்தக் காசிலே டிக்கட் போடு என்று சொன்னதுதான் கவனம் பெற வேண்டியது. ஈடுபாடு கொண்ட பக்தன் அந்த கண்டக்டர், காணிக்கை தருவது அவனுடைய கடமையாயிருக்கலாம். அதனால்தான் சொந்தப் பணத்தில் என்றார் சுவாமிகள். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கச் சொல்லவில்லை. ஏரோநாட்டிகல் இன்ஜினீயர் ஒருவர் தரிசனம் செய்ய வந்தபோது நிகழ்ந்த உரையாடல் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம். போஜராஜன் எழுதின ஸமாங்கண சாஸ்திரத்திலே ஆகாய விமானம் எப்படி உருவாக்கறதுன்னு ரொம்ப விஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறார். இப்படி பல சுவாரஸ்யங்கள். மகாப் பெரியவாளின் அன்பர்கள் மட்டுமல்ல. அனைவருமே படித்தும், நடித்தும் பார்த்தும் பயன்பெறக்கூடிய நல்ல நூல். -சுப்ர. பாலன். நன்றி : கல்கி, 2 ஜீன் 2013.