ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, பேட்ரிஷியா பதிப்பகம், 2/40, பி, இரண்டாம் தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ.

ஸ்ரீபெரும்புதூரில் 1991ல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலை ஒட்டுமொத்த தமிழின வரலாற்றில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்திய ஒன்று. இன்று அது முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழிக்கப்பட்ட நிகழ்வு வரைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த படுகொலை மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்திய வரலாறு நிச்சயமாக வேறாக இருந்திருக்கும். ஒருவேளை இலங்கையில் நிலைமை கூட இப்போதிருப்பதில் இருந்து முற்றிலும் வேறாக இருந்திருக்கலாம். இவ்வளவு முக்கியமான இந்நிகழ்ச்சி பல்வேறு விதமான கருத்துக்களை இந்திய அளவில் ஏற்படுத்தியது. பல புத்தகங்களும் இதையொட்டி எழுதப்பட்டன. இவற்றில் தமிழினத்துக்கு ஆதாரவாக இப்படுகொலை மீது இருக்கும் சந்தேகங்களை விளக்கி, வந்திருக்கும் நூல் இது. திருச்சி வேலுச்சாமி டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் உடன்பயணித்த அரசியல்வாதி. அவர் ஜெயின் கமிஷனில் சுவாமியை எதிர்கொண்டது. வாழப்பாடியாரை நம்பி ஏமாந்தது, ஜெயலலிதா, சோனியா ஆகியோரால் இவர் தாக்கல் செய்த ஜெயின் கமிஷன் அபிடவிட் தொடர்பாக அழைத்து விவரம் கேட்கப்பட்டது என்று பல்வேறு சம்பவங்களை இந்நூல் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ராஜீவ் கொலையை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் முன்முடிவுடன் தான் விசாரணையை நடத்தினார்கள் என்று சொல்லும் வேலுச்சாமி பல்நோக்கு புலன் விசாரணைக்கு குழுவிடம் தான் எதிர்கொண்ட விசாரணையைம் சுவாரசியமாக விவரித்துள்ளார். ராஜீவ் கொலை விசாரணை மட்டுமல்லாமல் அவரது கொலையாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு தூக்குக் கயிற்றின் நிழலில் இருக்கும் மூவரின் விடுதலைக்காக நடக்கும் போராட்டங்களிலும் சில முக்கியமான செயல்களை அவர் புரிந்திருப்பதும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான நடையில் பத்திரிகையாளர் பா. ஏகலைவன் திருச்சி வேலுசாமி தரும் தகவல்களைக் கையாண்டுள்ளார். நன்றி: அந்திமழை, 1/1/2013.

—-

 

கூடுகள் சிதைந்த போது, அகில், வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606601, விலை 120ரூ.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த அகில் (அகிலேஸ்வன் சாம்பசிவம்) இப்போது கனடாவில் வசிக்கிறார். சிறந்த எழுத்தாளர்களாக புகழ் பெற்றுள்ள இலங்கைத் தமிழர்களில் இவரும் ஒருவர். அகில இந்திய 14 சிறந்த சிறுகதைகள் கொண்ட நூல். கூடுகள் சிதைந்தபோது ஒவ்வொரு கதையும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. உரையாடல்கள், இலங்கைத் தமிழர்களின் பேச்சத் தமிழில் எழுதப்பட்டுள்ளதால் உயிரோட்டத்துடன் விளங்குகின்றன. வலி என்ற கதை அசைவம் சாப்பிடுகிற கதாநாயகன் சைவனாக மாறுவதைப் பற்றியது. ஜீவன் உள்ள கதை, கூடுகள் சிதைந்த போது கதை மனதைத் தொடுகிறது. மொத்தத்தில் போர் காலத்தில் இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை கதைகளில் ஆசிரியர் வர்ணித்துள்ளவிதம் இதயத்தைப் பிசைந்து கண்களில் கண்ணீரை வரச்செய்கின்றன. நன்றி:தினத்தந்தி, 22/2/2012.

Leave a Reply

Your email address will not be published.