சாதியும் தமிழ்த்தேசியமும்
சாதியும் தமிழ்த்தேசியமும், பெ. மணியரசன், பன்மை வெளி, எண் 1, இராசா வணிக வளாகம், நீதிமன்றச் சாலை, புது ஆற்றுப் பாலம், தஞ்சாவூர் 1, விலை 80ரூ.
சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று பாதியை நாடு மறந்தால் – மற பாதி துலங்குவதில்லையாம் – என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சாதி ஒழிப்பு வீரர்கள் தமிழைப் புறக்கணிப்பதும், தமிழ்த் தீரர்கள் சாதிப் பிரச்னைகளை மறைத்துச் செயல்படுவ்தும்தான் இன்று தமிழ்ச் சமூகத்தில் நடக்கிறது. இந்த இரண்டு பிரச்னைகளையும் சம அளவில் வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள் ஒருசிலர் மட்டுமே. அதில் முக்கியமானவர் பெ. மணியரசன். புரையோடிக்கிடக்கும் சாதித் திமிரை அடித்து நொறுக்கும்போதுதான் தமிழன் என்ற உணர்வு மேலோங்க முடியும் என்று உறுதியாக நம்பி எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதைக் காட்டுகிறது. தமிழ்த் தேசியம் பொய், தமிழர் ஒற்றுமை நடைமுறைச் சாத்தியமற்றது. என்பதைத்தானே? தமிழ்த் தேசியவாதிகளால் ஆதிக்க சாதித் தமிழர்களையும் ஒடுக்கப்பட்ட தமிழர்களையும் ஒன்றுசேர்க்க முடியுமா? தமிழ்த் தேசிய அமைப்புகள் தலித் மக்கள் மீது நடத்தப்படும் சாதிவழிப்பட்ட ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்வதில்லையே? தமிழ்த் தேசியம் என்பது மேல் சாதித் தமிழர்களின் கருத்தியல் அல்லவா? என்று சொல்லப்படும் குற்றசாட்டுகளை பெ. மணியரசன் தன்னுடைய வாதங்களின் மூலமாக மறுக்கிறார். தலித்தியம் பேசும் சிலரின் தமிழ்த் தேசிய எதிர்ப்பு இந்திய தேசியத்தில் இருந்து வருவதை அடையாளம் காட்டுகிறார். தமிழின உணர்ச்சிக்குள்ளும் தமிழின உறவுக்குள்ளும் சிக்கிவிடாமல் தலித்துக்களைத் தடுப்பது தலித்தியவாதிகளின் தேவையாக உள்ளது.. ஆனால் தமிழ்த் தேசியம் என்பது தீண்டாமை உள்ளிட்ட சாதி ஒடுக்குமுறையை ஒழிக்கும் பணியை உடனடி வேலைத் திட்டத்தில் வைத்துள்ளது. மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும் குறிப்பாகத் தமிழர்கள் அனைவரும் சமம் என்பதையும் தனது கோட்பாடாக வைத்துள்ளது. வறட்டுப் பெருமை பேசும் தமிழினவாதப் பார்வை தமிழ்த் தேசியத்தில் இல்லை. தமிழ்த் தேசியம் என்பது பொத்தாம் பொதுவாகத் தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தும் கோட்பாடல்ல. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதாத ஒடுக்குமுறை இல்லாத தமிழர் ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகிறது என்று பெ. மணியரசன் சொல்வதை அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகளும் பின்பற்றினால் வரவேற்கலாம். தமிழ்த் தேசிய இயக்கங்களின் ஆக்கபூர்வமான திட்டங்களில் ஒன்றாக சாதி மறுப்பைக் கடைப்பிடிக்கலாம். சாதித் தலைவர்களது பிறந்த நாள் விழாக்களுக்கும் மாலை அணிவிக்கும் சடங்காக இல்லாமல், எந்த சாதி ஒடுக்கப்பட்டாலும் அதைத் துணிச்சலாக உடைத்து கருத்துச் சொல்லும் அமைப்புகளாக இவை மாறவேண்டும். எந்த வெறியும் தீங்கானதுபோல் இனவெறியும் தீங்கானதே. இனப்பற்றும் இனவிடுதலை இலட்சியமும் மனிதகுலப்பற்றின் மனிதகுல விடுதலையின் ஒரு பகுதியாகும் என்கிறார் பெ. மணியரசன். மனிதகுல விடுதலைக்கு இந்தப் புத்தகம் அடித்தளமிடுகிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன்