கொங்குநாட்டுக் கோயில்கள்

கொங்குநாட்டுக் கோயில்கள், கேராசிரியர் கி. வெங்கடாச்சாரி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 252, விலை 225ரூ

தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு என ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆட்சிசெய்தனர். கோவை, சேலம், தர்மபுரி,கொங்குநாடாகும். இங்கு உள்ள கோவில்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த நூல். கோவில் வரலாறு, கல்வெட்டு புராணம், சிற்ப நுட்பங்கள் ஆகிய பல்வேறு கோணங்களிலும் நேரிடையாகப் படங்கள் மூலமும், ஒவ்வொரு கோவிலாக நூலாசிரியர் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்வதுபோல எழுதியுள்ளார். கடந்த 1300 ஆண்டுகளுக்கு முன் தேவாரத்தில் பாடிப் போற்றிய அவிநாசி, திருமுருகன் பூண்டி, பவானி, திருச்செங்கோடு, பாண்டிக்கொடுமுடி, வெங்சாமரக்கூடல், கரூர் கோவில்கள் கண்ணால் காண்பதுபோல எழுதப்பட்டுள்ளன. சைவ, வைணவ ஒற்றுமைக்கு சான்றாக விளங்குவது கொங்கு நாட்டின் சீரங்கம் காரமடை ஆகும். பேய், பிசாசு, பில்லி சூனியம் தோஷ பரிகாரத்தலம் இது. கொங்கு நாட்டுத் தென் திருப்பதி, தான்தோன்றி மலை வெங்கடரமண சுவாமி கோவில், நாமக்கல் அனுமன் புகழ்மிக்க கோவிலில் உள்ளார். பொள்ளாச்சி மாரியம்மன், ஆனைமலை படுத்துக் கிடக்கும் மாசாணி அம்மன், பண்ணாரி அம்மன், மருதமலை, பழனி முருகன் ஆகிய தெய்வத் தலங்கள் படிப்போரை ஆச்சரியப்படுத்துகின்றன. கொங்குநாட்டு கோவில் களஞ்சியம் இந்நூல். -முனைவர் மா.கி.ரமணன். நன்றி:தினமலர், 19/5/2013.  

—-

 

பத்துப்பாட்டு ஆராய்ச்சி, மா. இராசமாணிக்கனார், சாகித்திய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 688, விலை 365ரூ

சங்க கால இலக்கியங்களில் மிகவும் பாராட்டிப் போற்றப்படும் நூல்களில் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் குறிப்பிடத்தக்கவையாகும். இவ்விரண்டின்வாயிலாக, கி.பி. முதல் நூற்றாணடு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரையில், தமிழகத்தில் நிலவிய அரசியல், மக்கள் வாழ்க்கை, விவசாயம், கைத்தொழில்கள், சமயம், நாகரிகம், பண்பாடு முதலியன குறித்து அறியலாம் என்பர். இந்நூலாசிரியர் மிகவும் முயன்று பத்துப்பாட்டின் ஆராய்ச்சியை 35 தலைப்புகளில் செய்துள்ளார். அவற்றில் பத்துப்பாட்டின் காலம், ஐவகைநிலங்கள், தொண்டை, சோழ, பாண்டி நாடுகளின் ஊர்கள், முருகனுக்குரிய இடங்கள், மன்னர்கள், உணவும் உடையும், இல்வாழ்க்கை, சமயம், அழகுக்கலைகள், விலங்குகள், பறவைகள், நீர்நிலைகள் முதலியன படிக்கப் படிக்கப் பல்சுவை விருந்தாக உள்ளன. நூலின் இறுதியில் அரிய சொற்களும் பிற மொழிச் சொற்களும் எனும் பகுதியும் பத்துப்பாட்டின் ஆசிரியர்களின் புலமைத் திறனும் எனும் பகுதியும் நூலாசிரியரின் நுண்ணிய அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். பயனுள்ள பாதுகாக்க வேண்டிய நூலாகும். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி:தினமலர், 19/5/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *