மஹாபாரதம்
மஹாபாரதம், பி.ஆர். சோப்ரா, தமிழாக்கம்-துக்ளக் வெங்கட், டி.எஸ்.வி.ஹரி, டவர்-1, #603, மந்திரி சினர்ஜி, 1/124, பி, பழைய மஹாபலிபுரம் ரோடு, படூர், சென்னை 603103, பக். 1320, விலை 850ரூ. To buy this Tamil book online –www.nhm.in/shop/100-00-0001-032-9.html
முதல் முறையாக 1988-90களில் தேசிய அளவில் துர்தர்ஷனில் டி.வி. சீரியலாக பி.ஆர். சோப்ராவின் மஹாபாரதம் ஒளிபரப்பானது. ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை நேரத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல், அப்போது மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி சாதனை புரிந்தது. இந்த சீரியல் ஒளிபரப்பான அந்த ஒரு மணி நேரத்தில், வட மாநிலங்களில் தெருக்களெல்லாம் வெறுச்சோடி கிடக்கும் அளவுக்கு மக்கள் அந்த சீரியலோடு ஒன்றிப்போய் விட்டிருந்தனர். அந்த அளவுக்கு அதன் கதை அமைப்பும், காட்சிகளும், வசனங்களும், பாத்திரப் படைப்புகளும் மக்களை ஈர்த்தன. ராமாயணம், மஹபாரதம் ஆகிய இரு இதிகாசங்களில் மஹாபாரதம்தான் அதிகமான கதாபாத்திரங்களையும், பல்வேறு மனித குணாதிசயங்களையும் கொண்ட விறுவிறுப்பான கதை. இந்தக் கதை ஹிந்தியில் அப்போது ஒளிபரப்பானதால், தமிழகத்தில் பலருக்கும் புரியவில்லை. அச்சமயத்தில் இந்நூலாசிரியரால் தமிழாக்கம் செய்து துக்ளக்கில் வெளியிட்ப்பட்டபோது, மக்களிடம் அதற்கு பெரும் வரவேற்பு கிட்டியது. கதாபாத்திரத்தின் வாயசைவுக்கு ஏற்ப வசனங்கள் சரித்திர கால தமிழில் திறம்பட மொழியாக்கம் செய்யப்பட்டதே அதற்குக் காரணம். இப்போது படித்தாலும் அக்காட்சிகள் கண்முன் ஓடுவதை உணரலாம். அந்த மஹாபாரதத்தின் முழு சீரியலும் தற்போது உறுதியான பைண்டிங்குடன் ஒரே புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக் 5/6/13
—-
அண்டமும் ஆன்மீகமும், பி.ஆர். வெங்கடராஜு, சாகித் பப்ளிகேஷன்ஸ், 22/15, 6வது குறுக்குத் தெரு, சி.ஐ.டி. காலனி, சென்னை 4, பக். 275, விலை 165ரூ.
ஒரு காலத்தில் நேர் எதிர் துருவங்களாகக் கருதப்பட்ட மெய்ஞானமும், விஞ்ஞானமும் இன்று ஒன்றுக்குள் ஒன்று என்ற உண்மையை உணர்த்தும் நிலை வந்துவிட்டது. அந்த வகையில் இந்நூலாசிரியர் ஹிந்து ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பை இந்நூலில் விளக்கியுள்ளார். பரமாத்மாவை அண்டத்திலுள்ள ஆதிநுண்மின் சக்தியாகவும், ஜீவாத்மாவை சூரியனிலிருந்து உண்டாகும் நுண்மின் சக்தியாகவும் ஒப்பிடும் ஆசிரியர், அண்டமும் சூரியனம் எப்படி உருவாயின. அதிலிருந்து பூமி உட்பட மற்ற கோள்கள் எப்படி உருவாயின, பூமியில் உயிரினங்கள் எப்படி தோன்றின என்பனவற்றை எல்லாம் அறிவியலையும் ஆன்மீகத்தையும் கலந்து விளக்குகிறார். தவிர, பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பை, கண்ணுக்குத் தெரியும் செல்ஃபோன், அதை இயங்க வைக்கும் கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றை ஆகியவற்றைக் கொண்டு விளக்குகிறார். இப்படி கடவுள், உயிர், பூர்வ ஜென்மம், மந்திரங்கள், யாகங்கள், கைலாயம் என்று 16 தலைப்புகளில் ஆன்மிக விஷயங்களையும் பிரபஞ்ச ரகசியங்களையும் அறிவியல் மற்றும் மனிதனின் நவீன கண்டுபிடிப்புச் சாதனங்களுடன் ஒப்பிட்டு விளக்குகிறார். புதிய கோணத்தில் எழுதப்பட்ட இந்நூலைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் அறிவியல் ஞானமும் தேவை. என்றாலும் விஞ்ஞான யுகத்தில் வளரும் இன்றைய சிறுவர்களின் ஆன்மீகச் சந்தேகங்களுக்கும், அவர்களின் பாணியில் பதிலளிக்க பெரியவர்களுக்கு இந்நூல் உதவும். -பரக்கத். நன்றி: துக்ளக் 24/4/2013.
—-
பழமையான 108 சிவாலயங்கள்,M.G. ஸ்ரீனிவாசன், சியாமளா பதிப்பகம், 5/146, காமராஜர் வீதி, மடிப்பாகம், சென்னை 91, பக். 176, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-034-3.html
சிவபக்தர்களக்கு அருமையான பயண வழிகாட்டி நூல். மகிமை வாய்ந்த 108 சிவாலயங்களை வரிசைப்படுத்தி, ஒவ்வொன்றிற்கும் தலைப்பிட்டு, இருக்கும் இடம், தீர்த்தம், தலவிருட்சம், சிறப்புக்கள், கோயில் நேரம், தொடர்பு எண், பாடல் என அனைத்தையும் வழங்கியுள்ளார்ஆசிரியர். தவிரவும் தஞ்சாவூர், திருநெல்வேலி என குறிப்பிட்ட ஊரில் தங்கிக் கொண்டு, அங்கிருந்து எந்தெந்த ஸ்தலங்களை தரிசிக்கலாம் என வரைபடங்களடன் கொடுத்துள்ளார். மிக சீரிய முயற்சி, அருமையான சிவத்தொண்டு. நன்றி: ஞானஆலயம், ஏப்ரல் 2012.