கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும், ஷங்கர் ராமசுப்ரமணியன், நற்றிணைப் பதிப்பகம், எண், 123 ஏ, திருவல்லிக்கேணி, நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-6.html

எதையும் அழுத்திப் பேசும்போது அது அருவெறுப்பாகி விடுகிறது. எதையும் உரத்துப் பேசும்போது பொய் நுழைந்துவிடுகிறது. எழுத்தாளன் இதற்கு நடுவில் சிக்கலான பாதையில் பயணிப்பவன் எனும் ஷங்கர் ராமசுப்ரமணியனின் முதல் கட்டுரைத் தொகுப்பு இது. விதைகள் மலமாக அறிமுகமானவர், கட்டுரைகள் மூலமாகவும் கவனிக்கப்பட வேண்டியவராகிறார். இலக்கியத்தில் கிடைக்கும் பிரபலயத்தின் மூலமாக உலகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லும் சட்டாம்பிள்ளை அந்தஸ்து கிடைத்து விட்டதாக நினைத்து சில படைப்பாளிகள் கட்டுரைகளை தீட்டி வருகிறார்கள். இவர்கள் மறந்தும் இலக்கிய உலகத்துக்குள் நடக்கும் கீழான காரியங்களை விமர்சிப்பது இல்லை. அதிகார மையங்களைக் கேள்வி கேட்க அவதாரம் எடுத்தவர்களே அதிகார மையங்களாக மாறிப்போன அவலமும் தமிழ் இலக்கியச் சூழலில் படர்ந்துவிட்டது. இதற்கு எதிரான குரல் இவருடையது. எழுதும் விரல்கள் தரப்படுத்தப்பட்ட சீருடைகள் அணிந்துள்ளன. இப்போது முன்பைவிட சூழல் சுயதணிக்கைக்கும், கூடுதல் கண்காணிப்புக்கும் உள்ளாகியிருப்பதே நிஜம். மறுப்பதற்கு, கேலி செய்வதற்கு வேடிக்கை புரிவதற்கு, முரண்படுவதற்கு, திளைப்பதற்கு இடம் இல்லாத மௌடிகமான தீவிர முகங்களின் சவ மௌனமே இன்றைய சூழல். பின்னால் ஆஃப்செட் மெஷினின் பேரிரைச்சல்… ரோட்டரி கிளப் போன்ற செயல்பாடுகளில் உள்ள ஒரு மூட்டமான குழு உணர்வும் குற்றவுணர்ச்சியும் போன்றதுதான் நம் தமிழ் எழுத்தாளர்களின் செயல்பாடுகளும் என்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியில் நடந்த எஸ். ராமகிருஷ்ணனின் நூல் விமர்சனக் கூட்டம் பற்றிக் குறிப்பிட்டு, சக படைப்பாளியின் நூல் குறித்து ஈகோ முனைப்பு இல்லாமல் அந்தக் கூட்டம் நடந்தது குறித்து மகிழ்கிறார். நான் மேற்சொன்ன கூட்டத்தைப்போல இப்போது ஒரு சந்திப்பை நிகழ்த்தவே இயலாது. வெற்றி தோல்வி மதிப்பீடுகளுக்குள் புத்தகங்களும் சிக்கியாகிவிட்டது என்று வருந்துகிறார். பொதுப் புத்திக்கு எதிராய் எழுந்த குரல்கள், இன்னொரு பொதுப் புத்திக்குள்தான் பயணிக்கின்றன என்பதும் இவரது குற்றச்சாட்டு. தமிழ்த் தேசியப் பொதுப் புத்தி, மார்க்சியப் பொதுப் புத்தி, பெரியாரியப் பொதுப்புத்தி, தொண்டூழிய சேவைப் பொதுப் புத்தி, தேசியவாதப் பொதுப் புத்தி, சுற்றுச்சூழல் பொதுப்புத்தி, பெண்ணியப் பொதுப்புத்தி வரை பல்வேறு சரக்குகளாக இன்று இதழ்களிலும் இணைய தளங்களிலும் அவை இறைந்து கிடக்கின்றன. அதுதான் பல்வேறு இடங்களில் நம்மை மறித்து வெவ்வேறு கள்ளக் குரல்களில் உரையாடிச் சிறைப்பிடிக்கிறது என்று சுதந்திரச் சிந்தனைக்கு தடை விதிக்கும் சித்தாந்தச் சிறைகளை இவரது கட்டுரைகள் உடைக்க முயற்சிக்கின்றன. அனைத்துக்குமே உன்னத இலக்கியம் என்பதே ஒரே லட்சியமாக இருக்கிறது. தனி மனித அடையாளங்கள் அல்ல. எழுத்தின் உள்ளுயிர் நாறி வருகிறது என்கிறார் ஷங்கர். அதை மீண்டும் உயிர்ப்பிக்கத் தூண்டும் கட்டுரைகள் இவை. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 13/1/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *