ஆழ்மனதின் அற்புத சக்திகள்
ஆழ்மனதின் அற்புத சக்திகள், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-2.html
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள், மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு. இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த வகையைச் சார்ந்ததுதான் இந்த அற்புதங்கள். ஆழ்மன சக்தியில் ஓரளவு பரிச்சயம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், இது குறித்த பல்வேறு தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். 1960களில் அமெரிக்காவில் வாழ்ந்த ஜோசப் டிலூயிஸ் என்பவர், அங்கு நடந்த பல விபத்துக்களை முன்கூட்டியே அறிவித்த நிகழ்ச்சிகள். அற்புதங்களை நம்பாத ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினையே வியக்க வைத்த வாசிலிவ் என்பவரின் ஆழ்மன சக்திகள். ஆவியுலகத் தகவல்கள், மறுபிறவிநினைவுகள், ஆர்மன சக்திகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், ஆல்ஃபா அலைகள், யோகா, தியானம் பற்றிய குறிப்புகளும் பயிற்சிகளும், நோய் தீர்க்கும் ஆழ்மன சக்திகள். உடலை விட்டு ஆத்மா எப்படி வெளியேறுகிறது, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பன போன்ற ஆய்வுகள், பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது போன்ற பல விஷயங்களை 60 கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் திகிலும் திகைப்புமாக இருக்கிறது. -பரக்கத். நன்றி: துக்ளக், 26/6/2013.
—-
மறைந்தும் வாழ்பவர்கள், எஸ். பாலகிருஷ்ணன், சென்னை 83, விலை 120ரூ.
தம்மைத் திருமாலின் நாயகியாகவே எண்ணி ஆடிப் பாடி, பக்தி செலுத்தியவர் மதுரையின் ஜோதி என்ற போற்றப்படுகிற நடன கோபால நாயகி சுவாமிகள். தாம் சித்தியடைவதற்கு ஒரு கணம் முன்னால் வானத்தைப் பார்த்து ஹரி அவ்டியோ. (ஹரி வந்துவிட்டார்) என்று கூறிச் சிரித்தாராம். தாயின் கருவறையிலிருந்து வெளிப்பட்ட குழந்தையைத் தங்கத் தாம்பாளத்தில் வாங்கினார்களாம். பிறந்தது முதல் சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலையே பருகி வளர்ந்தாராம். எட்டு வயதில் மடாதிபதியாகும் பேறுபெற்ற திருக்கோவிலூர் ரகூத்தம சுவாமிகள். சன்னியாசம் ஏற்க வேண்டாம் என்று அருளிய பகவான் ரமணரின் வாக்கை மதித்து இல்லறத் துறவியாகவே வாழ்ந்த தஞ்சாவூர் ஜானகி மாதா, திருப்போரூர் முருகப் பெருமான் ஆலயம் உருவாகக் காரணமாக இருந்த ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் என்று ஐம்பத்து நான்கு மஹான்களைப் பற்றிய சரிதங்களை, மிகவும் சுருக்கமான முறையில் மனத்தில் பதியும் வண்ணம் தொகுத்தளித்திருக்கிறார் ஆசிரியர் எஸ். பாலகிருஷ்ணன். நன்றி: கல்கி, 13/1/13.