ம.பொ.சி.யின் தமிழன் குரல்

ம.பொ.சி.யின் தமிழன் குரல், தொகுப்பு-தி.பரமேசுவரி, சந்தியா பதிப்பகம், பு.எண்.77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, 3 தெகுதிகள் சேர்த்து விலை 420ரூ.

தமிழக எல்லைப் பரப்பைக் காத்த தலைமகன், ம.பொ.சிவஞானம் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளை ஒருபுறம் கேரளத்தவரும், இன்னொரு புறம் ஆந்திரத்தவரும் எடுத்துக் கொள்ளத் துடித்தபோது பதற்றம் ஏற்பட்டது. ம.பொ.சி.க்கு மட்டும்தான். எங்கு இருந்தால் என்ன, இந்தியாவுக்குள்தானே இருக்கப்போகிறது என்று காங்கிரஸ்காரர்களும் இதையெல்லாம் சேர்த்துத்தானே நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம் என்று திராவிட இயக்கத்தவரும் காரணங்கள் சொல்லிக்கொண்டு இருந்தபோது இப்போது இருக்கும் தமிழகத்துக்காக அப்போது போராடிய, வாதாடிய முக்கியமான ஆளுமை ம.பொ.சி. தனது படைக்கலனாகத் தமிழ் முரசு (1946-51), தமிழன் குரல் இதழ் படைப்புகளை மட்டும் மூன்று தொகுதிகளாகக் கொண்டுவந்துள்ளார் தி.பரமேசுவரி. இவர் ம.பொ.சி.யின் பேத்தி. ம.பொ.சிவஞானம் என்றால், சிவன் ஞாபகத்துக்கு வரமாட்டார். அவர் தமிழ்தான் நினைவுக்கு வரும் என்று பாரதிதாசன் ஒருமுறை சொன்னார். அச்சகம் ஒன்றில் அச்சுக் கோர்ப்பவராக வேலைக்குச் சேர்ந்த ம.பொ.சி. தன்னுடைய எழுத்துக்களும் பல நூறு புத்தகங்களாக மாறும் என்று தொடக்கக் காலத்தில் நினைத்திருக்க மாட்டார். தமிழினம் தனது தனி நலன்களுக்காகப் போராட,புரட்சிப் பாதையில் படையெடுத்துவிட்டது. அந்தப் படையெடுப்பை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் இனி தமிழகத்தில் வாழ முடியாது. வாழ்ந்தாலும் வளர்ச்சிக்கு வசதி இருக்காது. ஆகவே, வயிறு, தமிழகத்துக்கு வாய் மலையாளத்துக்கு என்ற நிலையை விட்டொழித்து, வயிற்றுக்கு உணவளிக்கும் தமிழகத்தின் வாழ்வுக்காக உங்கள் வாய்கள் பேசட்டும். இதுதான் ம.பொ.சி.யின் தமிழ் படிக்கும்போதே எழுந்து நிற்கத் தூண்டும் மொழிநடை. பத்மபூஷன், பாரத ரத்னா பட்டங்கள், சுதந்திர இந்தியாவில் வழங்கப்பட்போது அவற்றைக் கடுமையாக எதிர்த்து எழுதி இருக்கிறார் ம.பொ.சி. காந்தியமும் காங்கிரஸும் என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகள் இன்றும் அப்படியே பொருந்துகின்றன. ஈழத் தமிழர் பிரச்னை குறித்து எழுத்தாளர் சொ.ம.வெ. எழுதிய கட்டுரையில், இலங்கை பற்றிய எல்லா முடிவுகளும் சென்னை அரசாங்கத்தின் சம்மத்துடன் செய்யப்பட வேண்டும் என்ற குறிப்பை படிக்கும்போது ஏக்கமே ஏற்படுகிறது. நடிப்பு டி.கே.ஷண்முகம், இசை எம்.எம்.தண்டபாணி தேசிகர், நாட்டியம் வழுவூர் ராமையா பிள்ளை, இலக்கியம் தெ.பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை என பல ஆளுமைகளைத் தேடித்தேடி தனது இதழில் எழுதவைத்துள்ளார் ம.பொ.சி. காலங்கள் கடந்தும் வரலாற்றுக்காகவும் தமிழுக்காவும் பல தடவைகள் படிக்கத் தூண்டுகிறது இந்தத் தொகுப்பு. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 9/6/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *