திருக்குறள் நயவுரை
திருக்குறள் நயவுரை, திருக்குறள் பெட்டகம், தங்க பழமலை, அருள்மொழி வெளியீடு, திருக்கோவிலூர் 605 757, பக். 88, விலை 30ரூ.
திருக்குறள் நயவுரை என்ற முதல் நூலில் குறட்பாவுக்கு உரை காணும்பொழுது, அவ்வுரைக்கு அரண் சேர்க்கும் வண்ணம் திருக்குறளுக்குள்ளேயே அமைந்துள்ள வேறு குறட்பாக்களைக் கருத்திற்கொள்வதும், நாம் கொள்ளும் உரையை உறுதிப்படுத்தும் வண்ணம் பிற புலவர் பெதுமக்களும், அருளாளர்களும் கூறிப்போந்துள்ள கருத்துகளை உளங்கொள்வதும் சிறப்பமைந்த உரைக்கு வழிகோலும் என்பதை மனதில் இறுத்தியே இவ்வுரையினை யான் எழுதியுள்ளேன் என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பு உள்ளது. அடுத்து திருக்குறள் பெட்டகம் என்ற நூலில் 1330 குறளிலிருந்து அதிகாரத்துக்கு ஒன்றுவீதம் 133 குறட்பாக்களை தேர்வுசெய்து, அமைவுடை திருக்குறட்பாக்கள் அதிகாரத்திற்கு ஒன்று எனும் தலைப்பிலும் புறநானூற்றில் திருக்குறள் நீதிகளைப் பயின்று வருகின்ற 40 பாடல்களைத் தேர்ந்தெடுத்து புறநானூற்றில் திருக்குறள் நீதிகள் எனும் தலைப்பிலும் தந்திருக்கிறார். திருக்குறள் நூல் வரிசையில் இவ்விரு நூல்களும் நல்ல வரவு. நன்றி: தினமணி, 26/9/2011
—-
அமெரிக்கா வந்தேறியவர்களின் வளநாடு,ஜெயப்பிரகாசம், பொற்செல்வி பதிப்பகம், 12, ஜெயலட்சுமி நகர், மவுலிவாக்கம், சென்னை 125, விலை 100ரூ.
அமெரிக்காவில் பணியாற்ற விரும்புவது, அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வது போன்ற விஷயங்களில் தமிழர்களுக்கு அளவு கடந்த பிரியமாக உள்ளது. அவ்வாறு நினைப்பவர்களுக்காகவே எழுதப்பட்ட நூல் அமெரிக்கா வந்தேறியவர்களின் வளநாடு. 56 பயணக்கட்டுரைகளை நூலாசிரியர் ஜே.பி. என்ற ஜெயப்பிரகாசம் தொகுத்துள்ளார். அமெரிக்கா சமுதாயத்தின் கலாச்சாரமும், பண்பும் வாழ்க்கை முறையும் விளக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல வழித்துணையாகவும் அமையும். அமெரிக்கா சென்று வந்தவர்களுக்கு இந்நூலைப் படிப்பதன் மூலம் அந்நாட்டில் ஏற்பட்ட அனுபவங்கள் மலரும் நினைவுகளாக மீண்டும் தோன்றும். நூலில் இடம் பெற்றுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ், சான்பிரனாஸிஸ்கோ, நியூயார்க் போன்ற நகரங்கள், புதிர் இடம், டிஸ்னி உலகம், நயாகரா நீர்வீழ்ச்சி ஆகியவற்றின் வண்ணப்புகைப்படங்களை பார்ப்பதன் மூலம் அவற்றை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 5/6/2013.