அரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும்,
அரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும், கண்மணி, மானுட நம்பிக்கை, பக். 385, விலை 170ரூ.
இணையத்தில் வெளிவந்த அறுபத்தெட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமகால அரசியல் நிகழ்வுகள் ஒவ்வொன்று குறித்தும், நூலாசிரியர் கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தக் கட்சி அரசியல், இந்தக் கட்சி அரசியல் என்றில்லாமல், எல்லாக் கட்சியினரையும் இன உணர்வுடன் விமர்சனம் செய்திருக்கிறார் ஆசிரியர். ஒரு காலத்தில் சாராயம் விற்பவர்களை, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பர். இன்று, பட்டதாரிகள் அயல்நாடு மது விற்பவர்களாக இருக்கின்றனர் என்ற உண்மையைக் குடி குடியைக் கெடுக்கும் என்னும் கட்டுரை தெளிவாக்குகிறது. வரலாறு என்றால் பயந்து ஓடும், மக்கள் இந்தச் சமகால வரலாற்று நூலை வாங்கிப் படிக்க வேண்டும். -முகிலை ராசபாண்டியன் நன்றி: தினமலர், 7/7/13.
—-
ஆசிரியர் எண்ணங்கள், நன்னிலம் ப்ரும்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகள், விலை100ரூ.
வைதிக ஸ்ரீ என்ற இதழின் ஆசிரியரான ராஜகோபால கனபாடிகள், வேதம், சாஸ்திரம், தர்ம நெறிகளை விளக்குவதில் வல்லவர். இந்த நூலில் அம்மாதிரி சாஸ்திரி சம்பிரதாயமான கருத்துகளை எழுதியிருக்கிறார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் சாப்பிடும்போது, சிறிதளவே உட்கொண்டு, பெரும் பகுதி உணவை வீணாக்கும் பழக்கம் சரியல்ல. நமக்குத் தேவையான உணவை மட்டும் சாப்பிட வேண்டும். கோவில்களுக்கு செல்வோர் தனக்கும், குடும்பத்திற்கும் பிரார்த்தனை செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் ராஜா தார்மிகோ விஜயீது பவ, தேசோயம் நிருபத்ரவோஸ் என்பது காலம் காலமாக கோவில்களிலும், வீட்டு விழாக்களிலும் சொல்லும் மந்திரம். தர்மம் தவறாது, ஆட்சி புரியும் மன்னனுக்கு வெற்றியும், அந்த நாட்டில் வாழும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதும் இதன் பொருள். இதை, இன்று எத்தனை கோவில்களில் இந்த மந்திரத்தைச் சொல்லுகின்றனர் என, ஆசிரியர் கேட்கிறார். பல தகவல்களை குறிப்பிட்ட போதும், தமிழ் விளக்கங்களில் எழுத்துப் பிழை சற்று அதிகமாகவே உள்ளது. நன்றி: தினமலர், 7/7/13.