பிரபலங்களின் திருமண அனுபவங்களும் கருத்துக்களும்

பிரபலங்களின் திருமண அனுபவங்களும் கருத்துக்களும், பொன். முருகேசன், சஞ்சீவியார் பதிப்பகம், டி1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், 11 கவரைத்தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை 15, விலை 150ரூ.

பிரபலங்களே ஆனாலும் அவர்கள் பலரின் திருமண அனுபவங்கள் போராட்டம் நிறைந்தவைதான். சிலருக்கு காதலிக்கும் போதே எதிர்ப்பு. சிலருக்கோ காதல் கைகூடி திருமணம் வரை வந்தபின் எதிர்ப்பு. இந்த மாதிரியான தடங்கல்களை தாண்டி அவர்கள் எப்படி வெற்றிகரமாக தங்கள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்கள் என்பதை இந்த நூலில் சுவாரசியமாக கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். மேஜர் சுந்தர்ராஜன், வி.கே,ராமசாமி, தங்கர் பச்சான், தென்கச்சி சுவாமிநாதன், டாக்டர் ஷர்மிளா உள்பட சின்னத்திரை கலைஞர்கள், சினிமா நட்சத்திரங்கள், கவிஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 58 பேரின் திருமண வாழ்க்கை இந்நூலில் இடம் பிடித்திருக்கிறது. இவர்களில் கிராமியப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி போன்றோர் காதலை துரத்திப் பிடித்து கல்யாண மேடை ஏற்றியிருப்பதை படிக்கும்போது திகில் நாவலுக்கே உரிய பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.  

—-

 

கிறித்துவத் தமிழறிஞர்கள், தே. தீனதயாளன், 19, 19வது தெரு, ஜெய்நகர், அரும்பாக்கம், சென்னை 106, விலை 120ரூ.

மதப்பிரசாரம் செய்ய தமிழ்நாட்டுக்கு வந்த மேல்நாட்டு அறிஞர்கள், தமிழின் இனிமையைம், அதன் இலக்கிய வளத்தையும் கண்டு மனதைப் பறிகொடுத்தனர். திருக்குறளையும், சங்க இலக்கியங்களையும் ஆங்கிலத்திலும், பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்த்தார்கள். அவர்கள் ஆற்றிய சமயத் தொண்டைவிட, தமிழ்த்தொண்டு மேலோங்கி நின்றது. இப்படி, தமிழுக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல், சீகன்பால்கு என்பட மேல்நாட்டு அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களின் தமிழ்த்தொண்டு பற்றிய விவரங்களும் கொண்ட நூல் இது. எளிய இனிய நடையில் அமைந்துள்ள பயனுள்ள படைப்பு. நன்றி; தினத்தந்தி, 20/3/13.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *