குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்பெள்க்ஸ், சௌத் உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை-250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-801-2.html
வாட் டிட் யு ஆஸ்க் அட் ஸ்கூல் டுடே? நூலின் நேர்த்தியான தமிழாக்கம் இந்த நூல். கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கமலாவின் பார்வையில் இந்தியக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் வெளிப்படுகின்றன. அதோடு அவை எவ்வாறெல்லாம் சீர் செய்யப் படலாம் என்பதற்கான அணுகுமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நம் குழந்தைகள் உண்மையில் எதையும் புரிந்து கற்பதில்லை. மனப்பாடம் செய்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் இப்படி நடந்திருக்கலாம். உயிரோட்டமாக, அனுபவபூர்வமாக செய்து கற்பதற்கு உதவும் கற்பித்தல் முறையே நமக்குத் தேவை. நமது அணுகுமுறையில் என்ன தவறு இருக்கிறது? இந்தக் கேள்விக்குப் பல நிலைகளில் பதில் கூறலாம். ஆனால் இந்தப் புத்தகத்தில் கற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கான உளவியல் காரணங்களை மட்டும் அலசியிருக்கிறேன் என்று தெரிவிக்கிறார் ஆசிரியர். பதினோரு அத்தியாயங்களில் குழந்தைகளின் கல்வி தொடர்பான, வளர்ப்புமுறை தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாகவும் ஆழமாகவும் அலசியிருக்கிறார் ஆசிரியர். இதுபோன்ற நூல்களை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், தமிழ் மொழிக்கேற்ப கருத்தகளை மறுஆக்கம் செய்திருந்தால் வாசிப்பதற்கு எளிமையாக இருந்திருக்கும். ஆசிரியர்களுக்கு எழுதப்பட்டதே இந்நூல் என்றாலும் பெற்றோர்களும் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
—-
விகடன் கல்வி மலர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-024-2.html
ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும், +2வுக்குப் பின்னர் என்ன படிப்பது என்ற கேள்வியோடு திண்டாடுகின்றனர். எந்தத் துறைகளில் என்னென்ன புதிய படிப்புகள் உருவாகியிருக்கின்றன. அதன் எதிர்காலம் என்ன, எவ்விதமான வேலைவாய்ப்புகளுக்கு இப்படிப்புகள் வழிசெய்யும், நல்ல வருவாய் கிடைக்குமா, முன்னேற்றம் இருக்குமா என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் ஒரே நூலில் பதில் சொல்ல முடியாது. விகடன் கல்வி மலர் அந்தத் திசையில் ஓர் நல்ல முயற்சி. மாணவர்கள் தங்கள் ஆர்வம் என்ன, எந்தத் துறையில் முன்னேற விரும்புகின்றனர் என்பதை கணித்துக் கொள்வதின் அவசியத்தை உணர்த்துகிறது ஒரு பகுதி. பின்னர் தொழிற்படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் என்ற பகுதிகளின் கீழ், மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகளையும், அவற்றைச் சொல்லித்தரும் கல்வி நிலையங்களின் விவரங்களையும் வரிசைப்படுத்துகிறது. கடைசி பகுதி, தமிழகத்தில் உள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளைப் பற்றிப் பேசுகிறது. அதற்கான தயாரிப்பு முறைகள், விண்ணப்பிக்கும் முறைகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள கைடு. நன்றி: செல்லமே, 1/8/13.

