தொழிலாளி டு முதலாளி
தொழிலாளி டு முதலாளி, இராம்குமார் சிங்காரம், பெரிகாம், 37, அசீஸ்மல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை 6, பக், 112, விலை 80ரூ.
காய்கறிக் கடைக்காரர் முதல் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் வரை தமக்கென ஒரு தொழில் பாதையைக் கண்டு முன்னேறியவர்களின் நேர்காணல்களே இந்நூல். சொந்தத் தொழில், நாமே அதற்கு முதலாளி என்று களம் இறங்கியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், பிரச்னைகளைக் கண்டு துவண்டு போகாமல் முன்னேறும் வழிகள் என்று தொழில் முனைவோருக்கு எழும் சந்தேகங்களுக்கு நேர்காணலில் இடம்பெற்ற 23 தொழிலதிபர்களும் எளிய முறையில் பதில் சொல்கிறார்கள். முதலீட்டுக்குன பணத்தைப் புரட்டுவது முதல் தொழிலை எப்படி லாபகரமாக நடத்துவது என்பது வரை ஏராளமான செய்திகளை அனுபவக் கதைகளாக கூறும் போக்கு சிறப்பு.
—-
மருதநாயம் – வெல்லமுடியாத வீரம், இரா. குணஅமுதன், உயிர்த்துளி பதிப்பகம், 24/19, பண்டரிநாதர்தெரு, அம்மாப்பேட்டை, சேலம் 3, பக். 48, விலை 30ரூ.
இரண்டு முறை தூக்கிலிட்டும், தூக்குக் கயிறு அறுந்து விழுந்தும், மூன்றாவது முறையாக தூக்கிலிட்டுக்கொன்றனர் அந்த வீரனை, நம் தாய்நாட்டின் விடுதலை வரலாற்றில் இப்படியொரு போராளியை நாம் பார்த்திருக்க முடியாதபடி இருந்தது அவரது வீரம். அதனால் நவாப்பும் ஆங்கிலேயர்களும் அவர் இறந்த பின்னரும் அவர் பெயரைக் கேட்டு அஞ்சினர். அப்படிப்பட்ட வீரனான மருதநாயகத்தின் வரலாற்றை எளிய மொழியில் அனைவரும் அறிந்து கொள்ளத்தக்க சுவாரசியமான தகவலுடன் வெளிவந்திருக்கும் நூல் இது. இச்சிறிய நூலை வாசிக்க வாசிக்க வீரம் கொப்பளிக்கிறது. நன்றி: குமுதம், 14/8/13.
—-
திருக்குறள் கதைகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கணண தெரு சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 40ரூ.
இலக்கியத்தில் கரைகண்டவர் திருமுருக கிருபானந்த வாரியார். சில திருக்குறள் பாக்களைத் தேர்வு செய்து ஒவ்வொரு குறளின் கருத்தையும் விளக்கும் விதத்தில் கதைகள் எழுதியுள்ளார். சிறிய நூல். ஆனால் அரிய நூல். நன்றி : தினத்தந்தி, 7/8/13.