கமலின் கலைப்படங்கள்

கமலின் கலைப்படங்கள், பி.ஆர். மகாதேவன், நிழல், சென்னை 78, பக். 160, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-800-4.html

அறிவுஜீவி என்று ஒரு குறுகிய வட்டத்தினரும் விவரமறிந்தவர் என்று பொதுவாக பத்திரிகைகளும் கேள்வி கேட்பாமல் ஒப்புக் கொண்டுள்ள கமல்ஹாசனின் முக்கியமான, வித்தியாசமான திரைப்படங்கள் என்று அறியப்படுபவற்றில் தர்க்கரீதியான ஓட்டைகள் மலிந்துள்ளன என்று இப்புத்தகத்தின் ஒரு பகுதி கூறுகிறது. கதை சொல்லும் சினிமாவை தீவிரமாக நேசிக்கும் நூலாசிரியர், ஹேராம், விருமாண்டி, தேவர்மகன், அன்பேசிவம், குருதிப்பஉல், குணா ஆகிய படங்களை பார்ட் பார்ட்டாக பிரித்து, பிய்த்துப் போட்டிருக்கிறார். உலகநாயகன் என்பதால்எப்படி உலக சினிமாவெல்லாம் தேடி, ஒத்தி எடுத்துள்ளார் என்று விவரிக்கிறார். அவர் அலசும் எல்லாப் படங்களுக்கும் கதையை எவ்வாறு மாற்றி அமைத்திருக்கலாம் என்றும் கூறியிருப்பது வித்தியாசமான முயற்சி. என்றாலும் கதையம்சம் மொத்தமாக மாறிவிடுவதால் அது தேவையற்றது. மேலும் வேற்றுமொழிப் படங்களை இறுகத் தழுவி எடுக்கப்பட்ட கதைகளை எப்படி மாற்றினால் என்ன? அது காப்பிதானே? வெளிநாட்டு சினிமாவின் ஆடம்பரங்களில் மையல் கொண்டு, சுயமான சிந்தனை இல்லாதவர்கள் மலிநதுள்ள திரைப்பட உலகத்தில் வித்தியாசமாக எதிர்பார்த்துவிட முடியாது. இவ்வளவு காரமான விமர்சனத்தை அளித்துள்ள நையாண்டி நடை அபாரம். இவை பத்திரிகைகளில் காண்பது அரிது என்பது தமிழின் துர்திருஷ்டம். படித்து இன்புற்று சிந்திக்க வேண்டும். நன்றி: தினரன், 5/8/13.  

—-

 

மூலதனமா, மூளைதனமா?, எம்.வி. அடைக்கலராஜ், தமிழ் வாசல் பதிப்பகம், பக். 124, விலை 120ரூ.

தன்னைத் தானே உயர்த்தும் சுய ஏணியாக, இந்த நூல் செதுக்கப்பட்டுள்ளது. மூளையை மூலதனமாக்கி முன்னேறும் வழிகளை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள எழுதப்பட்டுள்ளது. மூளையின் சக்தி, காலத்தின் அருமை, வெற்றி பெறும் வெறி, அசைக்க முடியாத தன்னம்பிக்கை, துணிவு, பட்டதிலிருந்து பெறும் பாடங்கள், நட்பின் வலிமை, குடும்ப உறவின் இனிமை ஆகிய வழித்தடங்களில் இவரது வெற்றி பயணிக்கிறது. மகாத்மா காந்தி, அன்னை தெரசா, அப்துல்கலாம், பில் கேட்ஸ் ஆகியோர் சிகரம் தொட்ட அனுபவங்கள், இந்நூலில் சிறகுகளாக இணைக்கப்பட்டுள்ளன. வெற்றியின் ரகசியத்தை முல்லா கடைசி வரை யாரிடமும் கூறாத கதைபோல, பல சுவையான சம்பவங்களுடன், சிந்தனைகளுடன் தன்னை உயர்த்த வழிகாட்டுகிறது. இந்த நூல் வண்ண வண்ண விளம்பர மூலதனத்துடன் வெளிவந்துள்ளது. மேலேற உதவும் கையடக்க சுய ஏணி நூலிது. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 4/8/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *