மயிலின் இறகுகள்
மயிலின் இறகுகள், மயில் இளந்திரையன், தமிழ் மருதம், 2சி 1, மாரியம்மன் கோவில் வீதி, மாச்சாம்பாளையம், சுந்தராபுரம், கோவை 641024, பக். 132, டெம்மி விலை 140ரூ.
85 தலைப்புகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அறிவைக் கொடுப்பது கல்வி, ஆற்றலைக் கொடுப்பது கல்வி என்பது போன்ற இனிய, எளிய, வரிகளில் கவிதை அமைந்துள்ளதால் சிறுவர்களுக்குப் பெரிதும் பிடிக்கும். -திருமலை.
—-
நெஞ்சோடு, அகிலன் கண்ணன், தாகம், 34/35, சாரங்கபாணி தெரு, தி-நகர், சென்னை 17, பக். 112, விலை 45ரூ.
வில்லி தெய்வ சிகாமணி நினைவு இலக்கியப் பரிசு பெற்றது. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்றால், அகிலன் கண்ணன் கவிதைகள் சிறந்து விளங்குவதில் வியப்பில்லை. மூன்று பதிப்பகங்கள் கண்டதிலிருந்தே, இந்நூலின் சிறப்பை அறியலாம். தொகுதியில் உள்ள 11 சிறுகதைகளும், வாசகர்களைப் பெரிதும் கவரும் என்பது உறுதி. -மயிலை மாதவன். நன்றி: தினமலர், 6/11/2011.
—-
ஒப்பிலா ஒருமூவர், அ.கி. வரதராசன், காந்தளகம், சென்னை 2, சிங்கப்பூர் திருமுஐற மாநாடு ஏற்பாட்டுக்கு குழுவினரின் 2012ஆம் ஆண்டு வெளியீடு, பக்.96.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் ஆகிய மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கதை வடிவில் வெண்பாக்களில் யாத்துள்ளார் கவிஞர் வரதராசன். 63 நாயன்மார்களில் இம்மூவரை மட்டும் ஏன் பாடியுள்ளார்? என்ற கேள்வி பலருக்கும் எழும். காரணம் இருக்கிறது. பட்டினத்தடிகள் வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன் என்று திருக்காளத்தி அப்பரைப் பற்றிய ஒரு பாடலில் மிகவும் அற்புதமாக இம்மூவரைப் பற்றிப் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர் சிறுத்தொண்டர். பல்லவ வேந்தனின் படைத்தளபதி. திருச்செங்காட்டாங்குடித் திருப்பதிகம் முழுவதிலும் இவரின் பக்தியின் சிறப்பைப் பற்றி ஞானசம்பந்தர் பாடியுள்ளார் என்றால், இவரின் பெருமையை என்னவென்பது? இரண்டாமவர், சிற்றின்பத்தில் பெரு விருப்பம் கொண்ட நீலகண்டர். தன் மனைவி சொன்ன ஒரே ஒரு வசை சொல்லுக்காகத் தன் இளமை இன்பத்தைத் துறந்து, சிவபெருமான் மீது அளவிலா பற்றுக்கொண்டு செயற்கரிய செயல் செய்தவர். மூன்றாமவர் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்று மணிக்கவாசகப் பெருமானாலேயே புகழப்பெற்றவர் என்றால், இவரின் பெருமைதான் எத்தகையது. இம்மூவரையும் பாடப் புண்ணியம் அல்லவா செய்திருக்க வேண்டும். மூவர் கதைகளுக்குமான அருமையான வண்ண ஓவியங்கள் கண்ணிமைக்காமல் பார்க்கத் தூண்டுகின்றன. நூலிலுள்ள வெண்பாக்கள் மனதை வருடுகின்றன என்றால், வழுவழுப்பான தாள்கள் கண்களை வருடுகின்றன. சிவ அன்பர்கள் படிக்காமல் இருந்துவிடக்கூடாது. நன்றி: தினமணி, 1/7/2013.