வீணையின் குரல்
வீணையின் குரல், எஸ். பாலசந்தர், ஓர் வாழ்க்கை சரிதம், விக்ரம் சம்பத், யெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html
வீணை எஸ். பாலசந்தர் சென்ற நூற்றாண்டில் தென்னாட்டிலும் அதைக் கடந்தும் பிரபலமாக இருந்த கலைஞர். இளம் இசை மேதையாகவும் செஸ் விற்பன்னராகவும், வெளிக்கிளம்பிய பாலசந்தர், திரை உலகின் பல துறைகளில் புகழ் பெற்றவர். பாடல்கள் இல்லாத முதல் தமிழ் படமான அந்த நாள் இயக்குநர். பின்னர் செலுலாய்டை சுருட்டி வைத்துவிட்டு, வீணையின் ரீங்காரத்தால் பலரை வசியப்படுத்தியவர். அதே நேரத்தில் சங்கீத உலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பி அதிகார மையங்களுடன் பலமாக மோதியவர். கேள்விகளின் நாயகரான பாலசந்தரின் சரித்திரத்தை, வரலாற்றுப் பார்வையுடன் விக்ரம் சம்பத் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதன் தமிழாக்கமான வீணையின் குரல் எஸ். பாலசந்தர் நம் கையில். புத்தக ஆசிரியர் நேரடியாக அவருடைய கதாநாயகரை சந்தித்ததில்லை என்றாலும் பாலசந்தரின் சிஷ்யை, ஜெயந்தி குமரேஷிடம் சில காலம் இசை பயின்று பால சந்தர் மகாத்மியத்திலும் மகிழ்ந்திருக்கிறார். பாலசந்தரின் மனைவி சாந்தாவின் பரிபூரண ஆசிகளுடன் மகாபாரதத்திற்குள் குதித்துவிட்டார். அவருக்கு புதையலாக அமைந்திருக்கின்றன. பாலசந்தர் தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து தொடர்ந்து உருவாக்கிவந்த ஆல்பங்கள், தன்னைப் பற்றிய எல்லா செய்திகளையும், தனது புகைப்படங்களையும் தனது குறிப்புகளுடன் பதிவுசெய்து வந்திருக்கிறார் பாலசந்தர். இந்தப் பொக்கிஷங்களுடன் பாலசந்தரிடம் பணியாற்றியவர்கள் மற்றும் சமகாலத்தவர்களின் பேட்டிகள், ஒரு சரித்திர தேடல் அகழ்வாராய்ச்சிகள் என்று பலதும் கலந்து நானூறு பக்கங்களுக்கும் அதிகமான நூலாக விரிந்திருக்கிறது. பாலசந்தரின் வாழ்க்கையைக் கூறும்போது அதனுடன் இணையும் ஊடகங்களின் வரலாற்றையும் போக்கையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுவது சரிதான். ஆனால் இது போகிறபோக்கில் சொல்லப்படுவதாக இல்லாமல், அதுவேதான் போக்கு என்பதுபோல் விரிகிறது. இப்படித்தான் வீணை மேதையின் கதையில் வீணையின் பல்வேறு அங்கங்களைப் பற்றியும் நாம் அறிய நேர்கிறது (பக். 164). எல்லாவற்றிலும் பெரிய காட்சியை காட்ட நினைக்கும் ஆசிரியரின் ஆராய்ச்சி வளத்தால் வாசகனுக்கு ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் சில சறுக்கல்கள். இதனால் எல்லாம் ஆசிரியர் அரும்பாடுபட்டு சேகரித்த பாலசந்திர தரிசனங்கள் நம்மை ஆங்காங்கே கொள்ளை கொள்ளாமல் இல்லை. கண்ணை பறிக்கும் வண்ணத்தில் லுங்கியும் பொருத்தமான கலரில் பளபள குர்தாவும் கழுத்தை சுற்றிய ஸ்கார்ஃபுமாக மெரீனாவில் நடந்துவரும் இளைஞர் பாலசந்தரை சந்திக்கிறோம். தான் எடுத்த சினிமா காட்சிகளை எடிட் செய்யும்போது ஆஹா, பாலசந்தர் எப்பேர்ப்பட்ட ஜீனியஸ் நீ என்று தன்னைத் தானே ரசித்துக்கொள்ளும் பாலசந்தரை எதிர்கொள்கிறோம். எல்லோரும் நான் இசை அமைத்த இந்தப் பாடலை பிரமாதம் என்றார்கள்.நீ மட்டும் ஏன் கூறவில்லை? கேட்டுத்தான் பதில் வாங்கணுமா? என்று சோவுடன் சண்டை பிடித்த பாலசந்தரைக் கண்டு வியக்கிறோம். வீணைக் கலைஞராக பாலசந்தரின் வளர்ச்சியையும் சிந்தனைகளையும் ஆளுமையையும் நுட்பமாகவும் தகுந்த பக்கமேளத்துடனும் ஆசிரியர் விளக்குகிறார். அவரையும் அவருடைய தனிப் பாணியிலான வாசிப்பையும் ரசித்தவர்களைப் போலவே, அவர் வாசிப்பை விரும்பாதவர்களும் இருக்கவே செய்திருக்கிறார்கள். இதை எல்லாம் மறைக்காமல் முன்வைக்கிறார் விக்ரம் சம்பத். பாலசந்தரின் சில குறைபாடுகளை வெளிப்படுத்த அவர் தயங்கவில்லை. ஆனால் அவர் உள்ளம் சொக்கத்தங்கமாம். ராக சர்ச்சையில் பாலசந்தரின் தாக்குதலுக்கு ஆளான பாலமுரளியும் ஸ்வாதித்திருநாள் விவாகரத்தில் மொத்துண்ட செம்மங்குடியும் இதை ஏற்பார்களா? இத்தகைய நூலைப் படிக்கப் பொறுமை வேண்டும். மொழிபெயர்க்க இன்னும் பொறுமை வேண்டும். பொதுவாக வாயில் வழங்கும் தமிழில் உள்ள நடையை சில இடங்களில் ஆங்கில மூலம் இடறிவிடுகிறது. A place in the musical sun என்பதை சங்கீத சூரியனில் தனக்கு ஓர் இடம் என்றால்? சங்கீத உலகில் உரிய இடம் என்பதே சரி. இந்துஸ்தானி இசை வடிவமான கயால், காயல் என்று குறிக்கப்படுகிறது. டப்பா, தாப்பா என்றுள்ளது. பாடலையும் அதன் இசையையும் சேர்ந்தே உருவாக்கிய தியாகராஜர் போன்ற இயல் இசைப் படைப்பாளிகளை தமிழில் பாடலாசிரியர் என்று குறிப்பது போதுமானதாக இல்லை. பாலசந்தர் உருவாக்கிய ஆல்பங்கள், அவருக்கு பேதி மருந்து மாதிரியாகப் பயன்பட்டிருக்கின்றன என்று படிக்கும்போது வினோதமாக உள்ளது. அவை அவருடைய உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமைந்தன போலும். நன்றி: இந்தியா டுடே, 4/9/13.