ஒரு கதை வசனகர்த்தாவின் கதை
ஒரு கதை வசனகர்த்தாவின் கதை, ஆரூர்தாஸ், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 1, பக். 448, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-796-8.html
கதை வசனகர்த்தாவாக திரையுலகில் புகழ் பெற்ற ஆரூர்தாஸ் தனது வாழ்க்கை அனுபவங்களை சுவைபட விவரிக்கும் நூல் இது. அவரின் வாழ்க்கை வரலாற்றோடு அந்தக் கால கலையுலகின் வரலாறும் இதில் பின்னிப் பிணைந்திருக்கிறது. பராசக்தி படத்தில் அறிமுகமானபோது, சிவாஜியை குதிரை மூஞ்சி என்று சொல்லி படத்திலிருந்தே தூக்கிவிடச் சொன்ன ஏ.வி. மெய்ப்ப செட்டியார் பல வருடங்கள் கழித்து உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி நடித்த இரண்டு காட்சிகளைக் குறிப்பிட்டு இந்தியாவில் எந்த நடிகராலும் இவ்வளவு சிறப்பாக நடிக்க முடியாது என்று சொல்லி பாராட்டியதை விவரித்திருக்கிறார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியும் அந்த காலகட்டத்தில் சினிமா பாடல்கள் எழுதிய அவினாசி மணி, ஆலங்குடி சோமு, மாயவநாதன் போன்ற பாடல் ஆசிரியர்கள் குறித்தும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆரூர்தாஸை ஆதரித்து அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சின்னப்பா தேவர், ஒரு படத்தின் உச்ச கட்ட காட்சிக்காக செயற்கையாக அமைக்கும்படி சொன்ன வசனத்தை மறுத்து, என் பேனா நான் சொன்ன வசனத்தைத்தான் எழுதும். நீங்க சொல்றதை எழுதாது என்று சொல்லிவிட்டு வருவது, எழுத்தாளன் எந்த நிலையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டான் என்பதை நிரூபிக்கிறது. அடுத்த நாள் தேவரே ஆரூர்தாஸைத் தேடி வந்து தனது கருத்து தவறு என்று ஒத்துக்கொண்டு அவரை மீண்டும் படபிடிப்புக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகியோரைப் பற்றிய பல சுவையான சம்பவங்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. நூலின் துவக்கத்தில் வரும் சோழர் ஆட்சி, ஆங்கிலேயர் காலம் ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம். சினிமா ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பினரையும் கவரும் நூல். நன்றி: தினமணி,26/8/2013.
—-
குளச்சல் ஓர் வரலாற்று ஆய்வு, ஆராய்ச்சி மணி இயக்கம், குளச்சல் 629251, விலை 50ரூ.
கன்னியாகுமரி மாவட்த்தில் உள்ள துறைமுக நகரான குளச்சல், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. இந்த நகரின் பண்டைய கால வரலாற்றையும், அதன் தனிச்சிறப்பையும், பரந்த ஆய்வின் மூலம் வெளிக்கொணர்ந்து இருக்கிறார் ஆசிரியர் குளச்சல் வரதராஜன். வரலாற்றில் ஆர்வம் உடையோரும், மண்ணின் மைந்தர்களும் குளச்சல் நகரின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/11/2012,