ஓநாய் குலச்சின்னம்
ஓநாய் குலச்சின்னம், ஜியாங் ரோங், தமிழில்-சி. மோகன், அதிர்வு பதிப்பகம், விற்பனை உரிமை-நற்றிணை பதிப்பகம், ப.எண்-123எ, புதிய எண். 243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 600005, பக். 671, விலை 500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-4.html
தமிழகத்தில் இயற்கை வளங்கள் சூறையாடப்படும் இந்தச் சமயத்தில் ஓநாய் குலச்சின்னம் நாவல் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஓர் அரசியல் செயல்பாடாகும். மனிதன் பேய்மழையையும், பனிப்புயலையும் உண்டாக்கும் ஆற்றலை இந்த நூற்றின் வழியே கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறான் என்ற கேள்வியை இந்த நாவல் நம்முன்னே வைக்கிறது. அனைத்து வளங்களையும் மட்டு மீறிப் பயன்படுத்தும் பெரு நகரங்களைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யாமல் மேலும் மேலும் நகரங்கள் உப்பிப் பெருத்துக்கொண்டே செல்கின்றன. இதற்காகக் கையகப்படுத்தப்படும் எல்லா நிலங்களிலும் பூர்வகுடிகள் இருக்கிறார்கள். அவர்கள் மௌனிக்கப்படுகிறார்கள். அந்நியர்கள் ஒரு நிலத்தைக் கையகப்படுத்துவது என்பது எவ்வளவு புரிதலின்மையோடு வழிநடத்தப்படும் என்பது ஓநாய் குலச்சின்னம் நாவலில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நிலத்தில் பூர்வக்குடி என்பவர்கள் நிலத்தில் மலைகளைப்போல நதிகளைப் போல நிலையானவர்கள். ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தைப் புரிந்துகொள்வது சாத்தியமற்றது. அவர்களுடைய செயல்பாடுகள் எப்போதும் பாதகமானதாகவே அமைகின்றன. பழங்குடிகள் இயற்கையோட இயைந்திருப்பதையே நகாரிகமாகக் கருதுகிறார்கள். அவர்கள் பேராசை கொண்டு அழிக்காமல் இருக்கும் சமூகம்தான் நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் சமூகம் என்ற பிரக்ஞையோடு செயல்படுகிறார்கள். வளங்களை நுகர்வதில், பகிர்ந்து கொள்வதில் எதிர்காலச் சமூகத்திற்கு விட்டு வைப்பதில் சுயகட்டுப்பாடு நிறைந்த அந்த வாழ்க்கையை நாவலில் நமக்குக் காட்சிப்படுத்தகிறார் ஜியாங்ரோங். அதை நமது லட்சிய வாழ்வாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதனால்தான் நம்மைவிடவும் அதிக சனத்தொகைப் பெருக்கமுள்ள சீனர்களால் இந்த நாவலை அதிகம் விரும்பி வாசிக்க முடிந்திருக்கிறது. பீஜிங்கில் இருக்கும் அதிகாரத்தின் முழு உருவமாக நாவலில் வரும் பாவோ இருக்கிறான். அவனுடைய பேராசைகள், அகம்பாவம், முழுமனித குலத்தையும் உய்விப்பதற்காகத் தாங்களே வந்திருப்பதான பார்வை போன்றவை அவனை எப்படி அழிவு சக்தியாக மாற்றுகிறது என்பதைச் சித்தரித்து அதிகாரத்தை விமர்சிக்கிறது. இது ஒரு தளம். இரண்டாவது, இயல்பு மாறாமல் இருக்கும் ஓநாய்கள் எப்படிப்போராடி வாழும் அல்லது போராடி சாகும் என்பது. மங்கோலிய நாடோடிகள் ஓநாயின் இயல்புகளைக் கொண்டவர்கள். அதன் போர் வியூகங்களைக் கற்றுக்கொண்டவர்கள். அதனால்தான் அவர்களால் சீனர்களை நூறு வருடங்களுக்கும் மேல் ஆள முடிந்தது. ஓநாயின் குணத்திற்கு மிகப் பெரிய சான்றாக வரலாறு இருப்பதை நாவல் சொல்கிறது. நாவலில் உச்சமாக, பீஜிங்கிலிருந்து வந்த மனிதன் ஒரு ஒநாயை அதன் சிறு வயது முதல் எடுத்து வளர்க்க முயன்று தோற்றுப்போகும் பகுதி இருக்கிறது. ஓநாய்களிடமிருந்து தனித்து வைக்கப்பட்டிருந்த அது தனது ஊளையை ஆன்மாவிலிருந்து மீட்டெடுக்கும் கணங்களைப் படைப்பதன் மூலம் எழுத்தின் உச்சபட்ச சாத்தியங்களை ஜியாங் ரோங் செய்திருக்கிறார். இவ்வளவு சிறப்புகளையும் வெகு நேர்த்தியாகத் தமிழில் கிடைக்கும்படி செய்த சி. மோகனின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. நூலை நற்றிணைப் பதிப்பகம் நேர்த்தியாகத் தயாரித்துள்ளது. நன்றி: தி இந்து, 13/10/13.
