முதல் விடுதலைப்போர் 1800-1801
முதல் விடுதலைப்போர் 1800-1801, டாக்டர் கே. ராஜய்யன், ஜெகமதி கல்வி அறக்கட்டளை வெளியீடு, விலை 500ரூ.
வெள்ளையர்களே போற்றிய விடுதலை வீரர்கள் அன்னியர் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய முதல் போராட்டம் எது? 1857இல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்று வழங்கப்படும் போராட்டத்தையே அப்படி அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிரத்துப் போராடி 1799இல் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கூட்டத்தார், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1801இல் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட 543க்கும் மேற்பட்ட மருதுபாண்டியர் அணியினர் என்று தமிழ்நாட்டு மாவீரர்கள் போராடி மாண்டதை வரலாற்றாசிரியர்கள் ஏனோ பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். மருது சகோதரர்களின் வீரத்தைப் பற்றி அன்றைய ஆங்கிலேய அதிகாரிகளே பாராட்டிப் புகழ்ந்திருக்கிறார்கள் என்னும் தகவலைத் தக்க ஆவணப்பதிவுகளோடு இந்நூலில் வெளிப்படுத்துகிறார் டாக்டர் ராஜய்யன். சிற்றரசர்களின் ஆட்சி எல்லைகளில் அந்நிய இராணுவத்தினர் எப்படியெல்லாம் ஊடுருவி நிலைகொண்டார்கள் என்பதைப் பற்றியெல்லாம் இந்த நூலில் விவரமாகக் காணமுடிகிறது. கேப்டன் போர்ப்பஸ் என்பவன் ஆற்காடு நவாபின் ஆளுகைப் பகுதிக்குள் செய்த அட்டகாசங்களைப் பற்றிப் படிக்கும்போது நெஞ்சம் கொதிக்கிறது. சிறப்பு இணைப்பாக மருதுபாண்டியர்களின் திருக்கோயில் திருப்பணிகளைப் பற்றிய 104 பக்க வண்ணப்பட ஆல்பம் கண்களையும் கருத்தையும் கவரக்கூடிய முறையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவசியம் ஆழ்ந்து படிக்க வேண்டிய நல்ல நூல். -சுப்ர பாலன். நன்றி; கல்கி, 27/10/2013.