சேரர் கோட்டை பாகம் 1-2

சேரர் கோட்டை பாகம் 1-2, கோகுல் சேஷாத்ரி, கமலம் புக்ஸ், பாகம் 1, பாகம் 2, பக். 555, பக். 608, விலை 375ரூ, விலை 400ரூ.

சோழ நாட்டின் அரியணை ஏறிய நாள் முதல், தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை நயவஞ்சக சூழ்ச்சியால் படுகொலை செய்த ரவிதாஸன் கும்பலைப் பழி தீர்க்கத் துடிக்கிறான் ராஜராஜ சோழன். ரவிதாஸன் கும்பலுக்குப் பயிற்சி அளித்துத் திட்டம் தீட்டித் தந்த காந்தளூர்ச் சாலைப் பயிற்சி முகாமைத் தாக்கி, அடியோடு அழித்து அதைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் படை எடுக்கும், ராஜ ராஜ சோழன் தன் முயற்சியில் வெற்றி பெறுகிறான். காந்தளூர்ச் சாலை என்பது சாஸ்திரங்கள், நுண்கலைகள் மட்டும் கற்பிக்கும் ஸ்தாபனம் அல்ல. அவற்றுடன் கேரளத்தின் மிகப் பிரபலமான தற்காப்புப் பயிற்சிக் கலைகளான களிக்கலை, வர்மக் கலை ஆகியனவும் பயிற்றுவிக்கப்பட்டன. நூலாசிரியர் மிக முயன்று அந்தக் கலைகள் பற்றிய ஏராளமான விவரங்களை பல வரைபடங்களுடன் விவரித்திருக்கிறார். எதிராளியை எழுந்திருக்கவே விடாமல், அடித்துப் போடும் நிருச்சிம்மப் பிரயோகம். அதிலிருந்து, தந்திரமாகத் தப்பிக்கப் பயன்படுத்தப்படும், சரபப் பிரயோகம் போன்றவற்றை, ஆசிரியர் விவரிக்கும்போது பிரமித்துப் போய் விடுகிறோம். சரித்திர நாவல் பிரியர்கள் அவசியம் படித்துச் சுவைக்கலாம். -கே.சி.  

—-

  எம்.ஆர்.ராதா கலகக்காரனின் கதை, முகில், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 8/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை 600017, பக். 192, விலை 120ரூ

ரஷ்யாவில் இந்தி நடிகர் ராஜ்கபூர் பிரபலமாக இருந்தார். ஆவாரா படத்தின் விழாவுக்கு அவர் ரஷ்யா சென்றிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். இந்தியாவில் சிறந்த நடிகர் யார்? ராஜ்கபூர் சொன்ன பதில், தென்னாட்டில் கதாநாயகனாக, வில்லனாக, நகைச்சுவை நடிகனாக எல்லாப் பத்திரங்களையும் உணர்ந்து நடிக்கும் நடிகர் ஒருவர் இருக்கிறார் அவர் எம்.ஆர்.ராதா. எம்.ஆர்.ராதா பிறவிக் கலைஞர். துணிச்சல்காரர். நாடக மேடை சூப்பர் ஸ்டார். தனித்துவமான மனிதர். ஈடு, இணை இல்லா நடிகர். நூற்றாண்டு கண்ட அந்த கலைஞனின் வாழ்க்கையை, நடையை தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க உதவும் இந்தப் புத்தகம் ஒரு சினிமா இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 27/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *