பாவலர் வரதராஜன் பாடல்கள்
பாவலர் வரதராஜன் பாடல்கள், கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 125ரூ.
உரத்தகுரலில் உணர்ச்சி ததும்ப ஊர் ஊராய் மேடைதோறும் போய்ப் பாடிபாட்டுப் புரட்சி நடத்தியவர் பாவலர் என்று அழைக்கப்பட்ட வரதராஜன். இந்தப் பாவலரின் பாட்டு 1958ம் ஆண்டுவாக்கில் கேரளாவின் ஆட்சியை மாற்றிக் காட்டியது. அதுவரை எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை கேரளத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தது. இதற்கான வெற்றி விழாவில் கலந்து கொள்ள வந்த கேரள முதல்மந்திரி ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு இவடெ பாவலர் வரதராஜன் யாரானு? என்று கேட்டு, அவரை மேடைக்கழைத்து தனக்கு அணிவிக்க இருந்த ஆளுயர மாலையை அவருக்கு அணிவித்து அழகு பார்த்தது அன்றைய வரலாற்று அழகு. பாவலரின் பாடல்கள் கேட்கும் அந்த வினாடியிலேயே கேட்பவர்களின் உணர்ச்சியை தட்டிப் பார்ப்பவை என்பதை அவரது பாடலின் வரிகள் நிரூபிக்கின்றன. வரிக்கு வரி வாள்வீச்சான வார்த்தைப் பிரயோகங்கள் நூல் முழுக்க இறைந்து கிடக்கின்றன. பாவலர் வரதராஜன் இசைஞானி இளையராஜாவின் பெரியண்ணன் என்பதும், அண்ணனின் கச்சேரியில் தனது சிறுவயதில் இளையராஜாவும் பாடியிருக்கிறார் என்பதும் இந்தப்பாட்டோடு இணைந்த சுக ராகம்.
—-
வாழும் கலை – மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள், பி.எஸ்.ஆர். ராவ், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 300ரூ.
தத்துவ மேதை ஜே.கே. என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஜே. கிருஷ்ணமூர்த்தி மற்ற அனைவரிலும் இருந்து வித்தியாசமானவர். எந்த சமயத்தையும் மதத்தையும் ஏற்காதவர். அனைத்து கட்டுப்பாடுகளிலும் இருந்து ஒருவன் தின்னை விடுவித்து சுதந்திரமாக செயல்பட்டு உண்மையை அறிவதுதான் வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற அவரது கோட்பாட்டை வலியுறுத்தும் அவரது சொற்பொழிவுகள், புரிந்து கொள்ள சற்று கடினமாக இருக்கும். அவற்றை சாதாரணமானவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அந்த கருத்துக்கள் மிக எளிமையாக இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. நேரடி மொழியாக்கமாக இல்லாமல் எழுதி இருப்பதால், இடர்பாடின்றி தெளிந்த நீரோட்டம் போல சரளமாக படிக்க முடிகிறது. ஜே.கே.யின் தத்துவங்களை எளிதாக புரிந்து கொள்ள உதவும் நூல். நன்றி: தினத்தந்தி, 4/12/13.