தொல்காப்பியர் காட்டும் குடும்பம்
தொல்காப்பியர் காட்டும் குடும்பம், ரா. இளங்குமரனார், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்-603203, பக். 104, விலை 55ரூ.
தொல்காப்பியம் பற்றி, ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இந்நூலில் பொருளியலில் சுட்டப்பெறும் வாழ்வியல் சிறக்க, தொல்காப்பியம் 1215 செய்யுளில் குறிப்பிடும், குடும்பத்திற்கு வேண்டத்தக்க 10 இயல்புகளும், 1216 செய்யுளில் குறிப்பிடப்படும் குடும்ப வாழ்வுக்கு ஆகாத இயல்புகளாக, 11ம் மிகச் சுருக்கமாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளன. அகம், புறம் பற்றிய இலக்கண விளக்கங்களையும், கட்டமை ஒழுக்கம் பற்றி குறளுடனான ஒப்பீடுகளும், எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ள குடும்ப அமைப்பை பற்றிய குறுநூல். -பின்னலூரான்.
—-
நூற்றாண்டு இனிதே வாழும் இரகசியம், தவத்திரு மறைமலையடிகள், நர்மதா பதிப்பகம், பக். 448, விலை 200ரூ.
தவத்திரு மறைமலையடிகள் ஞானசாகரம் என்ற மாத இதழ் நடத்தி வந்தபோது அதில் எழுதிய கட்டுரைகளே இந்நூல் வடிவமாகும். உணவுப் பழக்கங்கள், உறக்கம், ஆண், பெண் சேர்க்கை, மக்கட்பேறு, நோயில்லா நீண்ட வாழ்க்கை என்று பல தலைப்புகளில் அடிகளார் ஒளிவு மறைவின்றி, தமிழ் மக்களுக்காக எழுதிய அருமையான நூல். அடிகளாரின் தமிழ் நடை கடுநடை என்று வாசிப்போர் உணராதிருக்க பழகு தமிழில் சிறிது திருத்தம்பெற்று, கருத்துக்கள் விடுபடாது, இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பதிப்பகத்தாரின் இப்பணி பாராட்டத்தக்கதாகும். -டாக்டர் கலியன்சம்பத்து. நன்றி: தினமலர், 29/12/13